Imran Khan: நான் பின்வாங்கப் போவதில்லை.. அதிரடியாய் அறிவித்த இம்ரான்கான்! பரபரக்கும் பாக்.!!
பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்.இவருடைய டெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சிக்கு முத்தஹிடா குவாமி இயக்க பாகிஸ்தான் கட்சி ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்தக் கட்சி எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கெனவே பிரதமர் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் உள்ளது. இந்தச் சூழலில் அவர் விரைவில் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு ஒரு உரையாற்றினார். அதில், “ஒரு அந்நிய நாடு ஒன்று இம்ரான் கான அகற்றவில்லை என்றால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளது. ஆகவே தான் தற்போது இந்த முயற்சி நடைபெற்று வருகிறது. நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அப்போது நான் கடைசி பந்துவரை விளையாடுவேன். என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு முறை கூட தோல்வியை ஒப்புக் கொண்டதில்லை. எந்த முடிவாக இருந்தாலும் நான் வீட்டில் உட்கார மாட்டேன். இதைவிட அதிக வலிமையுடன் திரும்பி வருவேன்” எனக் கூறினார்.
#WATCH | Islamabad: In his address to the nation, Pakistan Prime Minister Imran Khan claims that a foreign nation sent a message to them (Pakistan) that Imran Khan needs to be removed else Pakistan will suffer consequences. pic.twitter.com/aTGUh9HqSe
— ANI (@ANI) March 31, 2022
முன்னதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பில்வால் பூட்டோ சர்தாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “ஒருகிணைந்த எதிர்க்கட்சிகள் மற்றும் எம்.க்யூ.எம் கட்சி இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை தொடர்பாக விரைவில் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்க உள்ளோம். பாகிஸ்தான் மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் தற்போது இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. இந்த தீர்மானத்தில் இம்ரான் கான் அரசை ஆட்சியிலிருந்து விலக்க 172 எம்பிக்களின் ஆதரவு தேவை. தற்போது உள்ள இம்ரான் கான் அரசிற்கு எம்.க்யூ.எம் கட்சி ஆதரவை விலக்கி கொண்டதால் 164 பேர் மட்டுமே ஆதரவாக உள்ளனர். எம்.க்யூ.எம் கட்சியின் ஆதரவுடன் ஒருகிணைந்த எதிர்க்கட்சிகள் 177 பேர் ஆதரவுடன் உள்ளனர். ஆகவே இம்ரான் கான் தலைமையிலான அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைவது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே, பிரதமர் இம்ரான் கான்,“என்னை ஆட்சியிலிருந்து நீக்க வெளிநாட்டிலிருந்து சிலர் பணம் உதவி செய்து வருகின்றனர். அதன் காரணமாக இந்த சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. அது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தேவைப்பட்டால் காட்டவும் தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்