Pakistan Economic Crisis: அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு.. கடும் அவதியில் நோயாளிகள்.. பாகிஸ்தானில் பரிதாப நிலை..!
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பெருக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
இது பண வீக்கத்திற்கு காரணமாக அமைந்தது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் திணறி வரும் பாகிஸ்தான், வரும் மாதத்தில் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பாகிஸ்தானில் பெருளாதார நெருக்கடி தீவிரமாகி உள்ள நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.22.20 உயர்ந்து 272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 17.20 உயர்ந்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி, மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 12.90 உயர்ந்து 202.73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது சரிந்துள்ளதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வானது பிப்ரவரி 16ஆம் தேதி, நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுமட்டுமின்றி, அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, வெங்காயம் (482.07 சதவீதம்), சிக்கன் (101.93 சதவீதம்), தேயிலை (65.41 சதவீதம்), முட்டை (64.23 சதவீதம்), டீசல் (57.34 சதவீதம்), பாசுமதி அரிசி (56.09 சதவீதம்), பாசிப்பயறு (55.63 சதவீதம்), அரிசி மாவு (55.63 சதவீதம்)அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெருக்கடியில் சுகாதார உள்கட்டமைப்பு:
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி சுகாதார உள்கட்டமைப்பையும் விட்டுவைக்கவில்லை. அத்தியாவசிய மருந்துகளுக்காக நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான மருந்துகள் மற்றும் உள்நாட்டு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மருந்து பொருட்கள் (API) இறக்குமதி செய்யும் திறன் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதிப்படுவதால், உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மருந்து தட்டுப்பாடுகள்:
ஆபரேஷன் தியேட்டர்களில் இதயம், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான இரண்டு வார மயக்க மருந்துகளை விட குறைவாகவே உள்ளது. இந்த நிலைமை பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளில் வேலை இழப்பையும் ஏற்படுத்தக்கூடும். இதனால், மக்களின் துயரம் மேலும் அதிகரிக்கக்கூடும்.
வங்கிகள் தங்கள் இறக்குமதிகளுக்கு புதிய கடன் கடிதங்களை (LCs) வழங்கவில்லை என்று கூறி, சுகாதார அமைப்பில் ஏற்பட்ட நெருக்கடிக்கு நிதி அமைப்புமுறையே காரணம் என மருந்து தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.