Imran Khan Rally Firing: இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு... ஒருவர் உயிரிழப்பு!
இம்ரான் கான் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிடிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் குஜ்ரன்வாலாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நிலையில், இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இம்ரான் கானின் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஐவர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
#WATCH | A firing occurred near the container of former PM and Pakistan Tehreek-e-Insaf (PTI) chairman Imran Khan near Zafar Ali Khan chowk in Wazirabad today. Imran Khan sustained injuries on his leg; a man who opened fire has been arrested.
— ANI (@ANI) November 3, 2022
(Video Source: Reuters) pic.twitter.com/Qe87zRMeEK
குஜ்ரன்வாலாவில் உள்ள அல்லா வாலா சவுக்கில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற நிலையில், இம்ரான் கான் உள்ளிட்ட அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காயமடைந்துள்ளனர்.
பிடிஐ கட்சியைச் சேர்ந்த இம்ரான் கான் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பேரணியில் அவருடன் பலர் அவருடன் ஈடுபட்டிருந்தனர். அப்போது இம்ரான் கான் சென்ற கண்டெய்னர் வாகனத்துக்கு அருகில் வந்த நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து விரைந்து இம்ரான் கானின் காவலர்கள் அவரை பாதுகாப்பு வளைத்துக்குள் கொண்டுவந்தனர்.
துப்பாக்கிச்சூடு நிகழ்த்தி நவீத் எனும் நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னதாக இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், அதனால் தான் அவரைக் கொலை செய்ய வந்ததாகவும் அந்நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இம்ரான் கான் பேரணி நடைபெற்ற இடத்தில் இருந்து காலில் கட்டுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோவும் முன்னதாக வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், "கடவுள் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கியுள்ளார், நான் இன்னும் முழு பலத்துடன் போராடுவேன்" என்று இம்ரான் கான் கூறியுள்ளதாக அந்நாட்டு பத்திரிகையாளர்கள் ட்வீட் செய்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்ததோடு, இம்ரான் கான் விரைவில் நலம் பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.