Pakistan: 8 மணிக்கு மேல் சந்தையை மூடினால் குழந்தை பிறக்காது - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சர்ச்சை பேச்சு
8 மணிக்கு மேல் சந்தைகளை மூடினால் மக்கள் தொகை பெருக்கம், குறைவாக இருக்கும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பேசி இருப்பது இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் செய்தியாளர் சந்திப்பின் போது, மக்கள் தொகை அதிகரிப்பு குறித்த கூறிய வினோதமான கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது. நைலா இனாயத் என்ற பத்திரிக்கையாளர் பகிர்ந்த அமைச்சரின் பேச்சு தொடர்பான வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
New research, babies can’t be made after 8pm. “There’s no population increase in countries where markets close at 8pm,” defence minister. pic.twitter.com/G5IUAuOYD6
— Naila Inayat (@nailainayat) January 4, 2023
அந்த வீடியோவில், இரவு 8 மணிக்குள் சந்தைகள் மூடப்பட்ட இடங்களில், மக்கள் தொகை வளர்ச்சி குறைவாக உள்ளது என கூறியுள்ளார். அதாவது 8 மணிக்கு மேல் குழந்தைகள் பெறும் முயற்சி என்பது பலனளிக்காது எனும் வகையில் அமைச்சர் பேசியுள்ளார். இதன் மூலம் தான் கூற வருவது என்ன என்பதை விளக்கிக் கூறாமலேயே, அந்த செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் பேச்சு தொடர்பான வீடியோ கடும் விமர்சனத்திற்கும், கண்டனங்களுக்கும் ஆளாகியுள்ளது.
அதோடு ஒருவர், இது பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆராய்ச்சியின் அற்புதமான கண்டுபிடிப்பு. இது மனிதகுலத்திற்கு கிடைத்த ஒரு மேதையின் பங்களிப்பு. உலகின் அறிவியல் ஆராய்ச்சித் துறையின் மிக உயர்ந்த விருதை அவர்களுக்கு வழங்க வேண்டும் என ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
நெருக்கடியில் பாகிஸ்தான்:
அண்டை நாடான பாகிஸ்தான் தற்போது கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது. பாகிஸ்தான் மின்சார துறையின் கடன் தற்போது ரூ.2.437 லட்சம் கோடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு பணிக்கொடையாக வழங்க வேண்டிய சுமார் ரூ. 2,500 கோடி ரூபாயை பாகிஸ்தான் அரசு இதுவரை செலுத்தவில்லை. அரசு பணியாளர்களின் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கூட வழங்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முறையாக சம்பளம் கிடைக்காததால், ரயில் ஓட்டுனர்கள் நாடு முழுவதும் போராட்டங்களிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். எரிசக்தி துறையில் கடன் அதிகரித்து மின்சாரத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாடு முழுவதும் மின்சார பயன்பாட்டை குறைப்பதற்கான திட்டங்களை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதன்படி சந்தைகளை இரவு 8.30 மணிக்குள்ளும், திருமண மண்டபங்களை இரவு 10 மணிக்குள்ளும் மூட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.