Kamzy Gunaratnam : ’கூட்டம் சொல்வதை நீ கேட்காதே, நீ சொல்வதை கூட்டம் கேட்கும்படி செய்’ நார்வே நாட்டின் முதல் தமிழ் பெண் எம்.பியான கம்சாயினி..!
’கூட்டம் சொல்வதை நீ கேட்காதே, நீ சொல்வதை கூட்டம் கேட்கும்படி செய்’ என்ற மார்கரட் தாட்சரின் வரிகளுக்கு ஏற்ப, கூட்டத்தில் ஒருவராக இல்லாமல், கோடியில் ஒருவராக இருக்கிறார் தமிழரான கம்சாயினி குணரெத்தினம்
’அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு’ என கேட்ட சமூகத்தில் இருந்து இன்று எண்ணிலடங்காத பெண்கள் படித்து, அரசியலில் நுழைந்து ஆளுமைகளாக திகழ்கின்றனர். தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ மட்டுமில்லாமல் உலகின் பல நாடுகளிலும் நம் தமிழ் பெண்கள், அரசியலில் அசைக்க முடியாத சக்திகளாக விளங்கிக்கொண்டிருக்கின்றனர்.
எல்லாவற்றுக்கும் மணிமகுடம் வைத்ததுபோன்று, நம்முடைய மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஷ், அமெரிக்க நாட்டின் துணை அதிபராக இருக்கும் நிலையில், தமிழ்ர்கள் இன்னொரு முறை பெருமிதம் கொள்ளத் தக்க செய்தி ஒன்று வந்திருக்கிறது.
நார்வே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியிருக்கும் முதல் தமிழ் பெண் கம்சாயினி குணரெத்தினம்-தான் அந்த பெருமையை நமக்கு அளித்திருப்பவர். நார்வே நாட்டின் தலைநகரான ’ஓஸ்லோ’ நகரின் துணை மேயராக பதவி வகித்து வரும் கம்சாயினி, சமீபத்தில் நடைபெற்ற 169 பேரை தேர்வு செய்யும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடி, பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ் குடும்பத்தில் பிறந்த கம்சாயினி குணரெத்தினம், தன்னுடைய மூன்று வயதில் நார்வேக்கு சென்று, நார்விய மொழியில் படித்து வளர்ந்தவர். கம்சாயினிக்கு தாய்மொழியான தமிழ் மறந்துவிடக்கூடாது என்பதற்காக வார விடுமுறை நாட்களில் தமிழ் வகுப்பிற்கு அனுப்பிய அவரது பெற்றோரால், தமிழ் மீது அவருக்கு பிடிப்பு ஏற்பட்டது. அதோடு, இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வரும் இன உணர்வாளராகவும் இருக்கிறார் கம்சாயினி. தொழிற்கட்சி இளைஞர் அணியை சேர்ந்த கம்சாயினி, 2011 ஆம் ஆண்டு நடந்த அந்த கட்சியின் விடுமுறை கால முகாம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்த தாக்குதலில் இருந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தவர்.
நார்வேயில் 3.2 லட்சம் வெளிநாட்டு பின்னணியை கொண்ட வாக்களர்களின் பிரதிநிதிகளாக 11 பேர் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் 4 பேர் பெண்கள், அந்த 4 பெண்களில் ஒருவர் தமிழரான கம்சாயினி குணரெத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
’கூட்டம் சொல்வதை நீ கேட்காதே, நீ சொல்வதை கூட்டம் கேட்கும்படி செய்’ என்ற மார்கரட் தாட்சரின் வரிகளுக்கு ஏற்ப, கூட்டத்தில் ஒருவராக இல்லாமல், கோடியில் ஒருவராக இருக்கும் தமிழரான கம்சாயினிக்கு நார்வே நாட்டின் முக்கிய பதவிகள் விரைவில் தேடி வரவுள்ளன.