ஒரே சைஸ்.. அதான் கைமாத்திட்டேன்! 2 வது திருமணத்தின் போது முன்னாள் மனைவியிடம் சிக்கிய கணவன்!
முன்னாள் மனைவியின் உடை மற்றும் நகையை திருடி வருங்கால மனைவிக்கு பரிசளித்த மாப்பிள்ளையை திருமண நாளன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்காவில் வசித்து வந்த ஆடம் மற்றும் மேரி ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடையில் காதலாக மாற, பழகிய சில ஆண்டுகளின் இருவரும் இணைந்து திருமணம் செய்து கொண்டனர்.
சிறிது காலம் இருவரும் பரஸ்பரம் இணைந்து திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மேரி அந்த அலுவலகத்தில் இருந்து விலகி சென்றுள்ளார். மேலும், ஏதோ ஒரு சில காரணத்தினால் ஆடமையும் விவாகரத்து செய்துள்ளார்.
அதன்பிறகு, ஆடம் அதே நிறுவனத்தில் பணி புரிந்து வந்த செல்சியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளனர். செல்சியாவிற்கும், ஆடமிற்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும், அந்த காரணத்தினால்தான் மேரி ஆடமை விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஆடம் மற்றும் செல்சியா திருமண நாளன்று செல்சியா அணிந்து இருந்த உடை எங்கையோ பார்த்ததுபோல் அவர்களது ஊழியர்களுக்கு தோன்ற, அந்த புகைப்படத்தை எடுத்து மேரிக்கு அனுப்பி இருந்தனர்.
மேரியின் கோபம் :
அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன மேரி, இது ஆடமை தான் திருமணம் செய்துகொண்டபோது அணிந்து இருந்த உடை என்றும், இந்த உடையுடன் தனது நகைகளும் திருடு போனதாக தெரிவித்தார். மேலும், அந்த ஊழியர் அனுப்பிய புகைப்படத்தை ஆதாரமாக கொண்டு காவல்நிலையத்தில் முன்னாள் கணவன் மற்றும் அவரது காதலி மீது மேரி புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் ஆடம் மற்றும் செல்சியாவிடம் திருமணத்தின்போதே விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, அந்த நகை மற்றும் உடையை கழட்டி தருமாறு அவர்களை வற்புறுத்தியுள்ளனர். இதற்கு ஆடம் மற்றும் செல்சியா சம்மதிக்காததால் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நகை மற்றும் உடை மேரியின் உடமைகள் என்றும், இதை ஆடம் மற்றும் செல்சியாதான் திருடியதாகவும் தெரியவந்துள்ளது. இருவருக்கும் ஒரே உடலமைப்பு என்பதால் நகை, உடையை திருடி இரண்டாவது மனைவிக்கு கொடுத்துள்ளார் பலே கணவர். இதையடுத்து, இருவரையும் கைது செய்து உடமைகளை மீட்டு மேரியிடம் ஒப்படைத்தனர். தற்போது இதுகுறித்த செய்தி உலகம் முழுவதும் பரவி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்