Nepal New President: நேபாள அதிபர் தேர்தல்... அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் புதிய அதிபர் தேர்வு... தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
நேபாளத்தின் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடல் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடல் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம் சந்திரா 33 ஆயிரத்து 802 எலக்டோரல் வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட சுபாஷ் சந்திர நெம்பவாங் 15 ஆயிரத்து 518 எலக்டோரல் வாக்குகளையும் பெற்றனர்.
நேபாள அதிபர் தேர்தல்:
ராம் சந்திராவுக்கு நேபாளி காங்கிரஸ், சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) உள்ளிட்ட எட்டு கட்சிகள் ஆதரவு அளித்திருந்தன. அதே நேரத்தில், CPN-UML வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுபாஷ் சந்திராவுக்கு சுயேச்சைகளால் ஆதரவு அளிக்கப்பட்டது.
இந்தியாவில் குடியரசு தலைவர் தேர்தலை போல், நேபாளத்திலும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் சேர்ந்துதான் அதிபரை தேர்வு செய்கின்றனர். 313 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 518 மாகாண சபை உறுப்பினர்களும் சேர்ந்து அதிபர் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
ராஸ்திரிய பிரஜாதந்திர கட்சி (RPP) அதிபர் பதவிக்கு எந்த வேட்பாளரையும் முன்மொழியவில்லை. எனவே, ராம் சந்திராவும் சுபாஷ சந்திராவும் பின்னர் ஆர்பிபி கட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் ராஜேந்திர லிங்டன் மற்றும் பிற அலுவலக பணியாளர்களை சந்தித்து ஆதரவு கோரினர்.
இருப்பினும், தேர்தலில் வாக்களிக்காமல் ஆர்பிபி கட்சி அதிபர் தேர்தலை புறக்கணித்தது. நேபாளத்தின் காத்மாண்டுவில் நாடாளுமன்ற கட்டிடத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சட்டமன்ற உறுப்பினர்களுக்காக இரண்டு தனி வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது.
எலக்டோரல் காலேஜ் முறை என்றால் என்ன?
தேர்தலுக்காக அனைத்து மாகாணங்களில் இருந்தும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் காத்மாண்டு சென்றனர். பிரதிநிதிகள் சபையின் 275 உறுப்பினர்கள், தேசிய நாடாளுமன்றத்தின் 59 உறுப்பினர்கள், ஏழு மாகாண சபைகளில் இருந்து 550 உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 884 உறுப்பினர்களை கொண்டது எலக்டோரல் காலேஜ்.
எலக்டோரல் காலேஜ் முறைப்படி, நாடாளுமன்ற உறுப்பினருக்கு என தனி மதிப்பும் சட்டப்பேரவை உறுப்பினருக்கு தனி மதிப்பும் அளிக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சட்டசபை உறுப்பினர்களுக்கான பதவி ஏதும் காலியாகாமல் இருக்கும் பட்சத்தில், எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களின் மொத்த மதிப்பு 52,786 வாக்குகள் ஆகும். குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளை வேட்பாளர் பெற வேண்டும்.
எடுத்து காட்டாக, ஒரு சட்டப்பேரவை உறுப்பினரின் வாக்கு மதிப்பை விட நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு அதிகமாக எடுத்து கொள்ளப்படும். நேபாளத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 79. மாகாண சபை உறுப்பினரின் வாக்கு மதிப்பு 48.
கடந்த 2008ஆம் ஆண்டு, நேபாளம் குடியரசாக மாறிய பின்னர் நடைபெறும் மூன்றாவது அதிபர் தேர்தல் இதுவாகும்.
இதையும் படிக்க: Crime : கொலை செய்யப்பட்ட 1000 நாய்கள்...பட்டினி போட்டு கொன்ற கொடூரம்...முதியவர் செய்த அதிர்ச்சி காரியம்..!