குதிரை சவாரி விபத்தில் உயிரிழந்த மிஸ் யுனிவர்ஸ் ஃபைனலிஸ்ட் சியன்னா வீர்..
மிஸ் யுனிவர்ஸ் ஆஸ்திரேலியாவின் ஃபைனலிஸ்ட் போட்டியாளரான சியன்னா வீர் குதிரை சவாரியின் போது ஏற்பட்ட விபத்தால் ஒரு மாத காலமாக செயற்கை சுவாச உதவியில் இருந்தது வந்தவர் நேற்று முன் தினம் காலமானார்
மிஸ் யுனிவர்ஸ் ஆஸ்திரேலியாவின் ஃபைனலிஸ்ட் போட்டியாளரான சியன்னா வீர் மே 4-ஆம் தேதி விபத்து பாதிப்பால் உயிரிழந்தார். 23 வயதாகும் சியன்னா வீர் ஏப்ரல் 2-ஆம் தேதி சிட்னியில் உள்ள விண்ட்சர் போலோ மைதானத்தில் குதிரை சவாரி செய்துகொண்டு இருந்த சமயத்தில் அவரது குதிரை எதிர்பாராத விதமாக விழுந்தது. உடனே வெஸ்ட்மீட் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் லைஃப் சப்போர்ட்டில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக லைஃப் சப்போர்ட்டில் உயிர் பிழைத்து வந்த சியன்னா வீர் அதை எடுத்ததும் உயிரிழந்தார்.
குதிரை சவாரிதான் எனது உயிர்:
சியன்னா வீர் சிட்னி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் உளவியலில் இரட்டைப் பட்டம் பெற்றவர். கோல்ட் கோஸ்ட் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தனக்கு ஷோ ஜம்பிங் செய்வதில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும் அவர் கூறுகையில் "இதில் எப்படி எனக்கு ஆர்வம் வந்தது என்பது எனது குடும்பத்தாருக்கு தெரியவில்லை. ஆனால் எனது 3 வயதிலிருந்தே நான் குதிரை சவாரி செய்து வருகிறேன். அது இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. நான் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை சிட்னியின் கிராமப்புற பகுதிகளில் பயிற்சி மேற்கொண்டு நியூ சவுத் வேல்ஸ் அணியுடன் போட்டியில் ஈடுபடுவேன்" என செப்டம்பர் மாதம் நடைபெற்ற பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
கேமரா மேன் உருக்கமான பதிவு:
சியன்னாவுடன் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக இணைந்து பணிபுரிந்த ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் கிறிஸ் டுவைர், சியன்னா மறைவுக்கு சோசியல் மீடியா மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார். "உலகின் அன்பான ஆத்மாக்களில் நீங்கள் ஒருவராக இருந்தீர்கள், நீங்கள் இருக்கும் இடத்தை ஒளிரச் செய்தீர்கள், இப்போது நீங்கள் மறைந்துவிட்டதால் உலகம் மிகவும் இருண்டுவிட்டது" என சியன்னாவின் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். நீங்கள் எங்கிருந்தாலும், நாங்கள் அனைவரும் அறிந்த மற்றும் நேசிக்கும் கிரெம்லின் நீங்கள் தான் என நம்புகிறோம். நாங்கள் உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம்" என பதிவிட்டு இருந்தார்.