Italy Flight Accident: இத்தாலி: காரின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்.. விபத்தில் 5 வயது சிறுமி பலி..! - வீடியோ
இத்தாலியில் தீடிரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில், கார் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தார்.
இத்தாலியில் தீடிரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில், கார் மீது விழுந்து நொறுங்கிய விபத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
விமானம் விபத்து:
இத்தாலி ராணுவத்தைச் சேர்ந்த விமானி ஒருவர் வழக்கம்போல், துரின் நகரின் வான் பகுதியில் விமானத்தில் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழ் நோக்கி சரிய, சாலையில் ஒடிக்கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியது. இதில் காரில் இருந்த 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அவரது சகோதரரான 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுவர்களின் பெற்றோர் மற்றும் விமான ஓட்டி லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
ITALY :Terrible accident at Torino Airportwhere a plane from the Frecce Tricolori, the Italian patrol, crashed during rehearsals for the Air Force centenary meeting. The pilot ejected safely. #ITALY #planecrash #Torino pic.twitter.com/GyOvoyqS07
— Shivendra Pratap Singh (@vatsalshivendra) September 16, 2023
விழுந்து நொறுங்கிய விமானம்:
விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், இன்ஜின் செயலிழந்து விமானம் தரையை நோக்கி வேகமாக வந்த நிலையில், விமான ஓட்டி எஜெக்டர் ஆப்ஷனை பயன்படுத்தி நொடி நேரத்தில் வெளியேறினார். தொடர்ந்து, விமானம் சாலையில் மோதி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே, உராய்ந்தவாறு சில அடி தூரம் சென்றது. அடுத்த சில நொடிகளில் விமானம் முழுவதும் தீ பரவியது. இதனால், அப்பகுதியில் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது. இந்த வீடியோவை தற்போது பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.
விபத்திற்கான காரணம் என்ன?
விபத்திற்கான காரணம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, விமானம் வானில் பறந்தபோது சில பறவைகளின் மீது மோதியதாக கூறப்படுகிறது. அதில் ஒரு பறவை விமானத்திற்குள் சென்று இன்ஜினில் சிக்கியதில் அது செயலிழந்துள்ளது. இதனால் தான் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் இரங்கல்:
இத்தாலி துணைப் பிரதமர் மேட்டியோ சால்வினி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”விமானி பாராசூட் மூலம் குதித்து ஜெட்டில் இருந்து வெளியேறினார். இது ஒரு பயங்கரமான சோகம். காயமடைந்தவர்களுக்காக எனது பிரார்த்தனை மற்றும் உயிரிழந்தவருக்கு எனது இதயப்பூர்வமான அனுதாபங்கள்" என குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த சிறுமிக்காக பாதுகாப்பு அமைச்சகமும் தங்கள் தரப்பில் இரங்கலை தெரிவித்துள்ளது.