”கடத்தல்... கஷ்டம்... 30 வருஷத்துக்கு முன்னாடி என் ஊரு..” படத்தை வரைந்து தாயுடன் இணைந்த சிறுவன் கண்ணீர்..
தன்னுடைய வீடும், ஊரும் எப்படி இருந்தது என்பது மட்டும் நினைவில் இருந்துள்ளது. உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து மனதில் நினைவிருந்ததை எல்லாம் படமாக வரைந்துள்ளார் அந்த இளைஞர்.
தன்னுடைய நினைவாற்றலால் இளைஞர் ஒருவர் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தன் தாயுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் சீனாவில் நடந்துள்ளது
குழந்தை கடத்தல்கள் இன்றும் நடைபெறும் ஒரு குற்றச்செயல் தான். பல்வேறு காரணங்களுக்காக குழந்தை கடத்தல்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. அப்படி கடத்தப்பட்ட பல குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் தங்கள் சொந்த குடும்பத்தை கண்டுபிடிப்பதும் உண்டு. அப்படியான ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. 4 வயதில் கடத்தப்பட்ட லீ ஜிங்க்வி, 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தன் அம்மாவை சந்தித்துள்ளார். தன் குடும்பத்துடன் மீண்டும் இணைய அவருக்கு உதவி செய்தது வேறு ஒன்றுமல்ல. அவருடைய நினைவாற்றல் தான். நான்கு வயதில் கடத்தப்பட்ட அந்த சிறுவனுக்கு தன்னுடைய ஊர் பெயர், தெரு பெயர் என எதுவுமே தெரியாது.
ஆனால் தன்னுடைய வீடும், ஊரும் எப்படி இருந்தது என்பது மட்டும் நினைவில் இருந்துள்ளது.
உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து மனதில் நினைவிருந்ததை எல்லாம் படமாக வரைந்துள்ளார் அந்த இளைஞர். அந்த வரைபடம் இணையத்தில் வைரலாக, கிட்டத்தட்ட அதேபோல் வடிவமைப்பைக் கொண்ட கிராமத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அக்கிராமத்தில் மகனை தொலைத்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என விசாரித்ததில் லீ ஜிங்க்வியின் தாயாரை போலீசார் கண்டுகொண்டுள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி அவர்தான் லீயின் தாய் என தெரியவந்துள்ளது. ஆனாலும் டிஎன் ஏ சோதனை நடத்தப்பட்டு தாய் -மகன் உறவை போலீசார் உறுதிசெய்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள லீ, கிட்டத்தட்ட நான் வரைந்த படம் போலவே இருக்கிறது எனது கிராமம். தினமும் படம் வரையும் பழக்கம் எனக்கு உண்டு. அதுதான் இன்று எனக்கு உதவி செய்துள்ளது. எனக்கு மலையும், காடும், மாடும், வீடும் நினைவிருக்கிறது. எங்கள் குடும்பத்தில் இருந்தவர்கள் முகமும் நினைவில் இருக்கிறது. அந்த கண்களும், நெற்றியும் என் நினைவிலேயே இருக்கிறது. முதன் முதலாக அம்மாவுடன் வீடியொகாலில் பேசிய போது அவரை நான் சரியாக கண்டுகொண்டேன் என்றார்
4 வயதில் கடத்தப்பட்ட லீ, 1000 மைல் தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார் லீ.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்