ஒரு சிலந்திக்காக அழிந்துபோன 60 ஏக்கர் காடு.. காட்டையே கொளுத்திய போதை ஆசாமி!
சிலந்தியை பார்த்ததும் தன்னுடைய லைட்டரை வைத்து எரித்துக்கொல்ல நினைத்துள்ளார். அந்த நெருப்பு காடு முழுவதும் பரவி காட்டுத்தீயாக மாறிவிட்டது
ஒரு சின்ன சிலந்தியை கொல்லப்போய் ஒரு காட்டையை கொளுத்திய நபரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்
மூட்டப்பூச்சிக்கு வீட்டைக்கொளுத்துவதா என்று ஒரு சொலவடை உண்டு. ஆனால் அமெரிக்காவில் ஒருவர் சிலந்திக்காக ஒரு காட்டையே கொளுத்தியுள்ளார். ஆனால் அவர் வேண்டுமென்றே அந்தக்காட்டை கொளுத்தவில்லை. சிலந்தியை கொல்வதற்காக அவர் தன்னுடைய சிகரெட் பற்றவைக்கும் லைட்டரை பற்றவைக்கவே அது காட்டுத்தீயாக மாறி 60 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது. அமெரிக்காவின் உட்டாவின் ஸ்பிரிங்வில்லில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, ஒருவர் சிலந்தியை பார்த்ததும் தன்னுடைய லைட்டரை வைத்து எரித்துக்கொல்ல நினைத்துள்ளார். அந்த நெருப்பு காடு முழுவதும் பரவி காட்டுத்தீயாக மாறிவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளது. காட்டுத்தீ புகைப்படங்களையும், அது அணைக்கப்படும் புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.
இந்த செயலுக்கு காரணமானவர் காரி அலன். 26 வயதான காரி, காட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது அவர் கண்ணில் சிலந்தி ஒன்று சிக்கியுள்ளது. அதனை கொல்ல நினைத்தவர் நசுக்கி வீசி இருக்கலாம். ஆனால் அதனை கொடூரமாக கொல்ல நினைத்தவர் கையில் இருந்த லைட்டரை வைத்து பற்ற வைத்துள்ளார். ஆனால் காடே தற்போது எரிந்துவிட்டது.
இது தொடர்பாக காரி தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது காரியின் பையில் கஞ்சா உள்ளிட்ட சில போதைப்பொருட்களும் இருந்துள்ளன. அதனால் போதையில்தான் இப்படியான வேலையை காரி செய்திருப்பார் என போலீசார் கணித்துள்ளனர்.
8/1/22 @SpringvilleDPS fire and police asked @UCSO Deputies to respond to a fire north of their city. Cory Allan Martin, 26, Draper, said he tried to kill a spider with a lighter and started a fire. He was booked by for reckless burning, possession of marijuana/paraphernalia.
— Utah County Sheriff (@UCSO) August 3, 2022
இது குறித்து தெரிவித்துள்ள தீயணைப்புத்துறையினர், ஒரு நெருப்புபொறிதான் இப்படி காட்டையே அழிக்கிறது. தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. காற்று வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. விமானத்தின்மூலம் தண்ணீர் கொட்டப்பட்டதால் தீ எளிதாக கட்டுக்குள் வந்தது. ஒரு லைட்டர் கூட பல ஏக்கர் காட்டை நாசமாக்கும் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றனர்.