இந்தியா குறித்து அவமதிக்கும் கருத்து: 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்: அதிரடி நடவடிக்கை
லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால், இதற்கு மாலத்தீவு அமைச்சர்கள் கடுமையாக எதிர்வினையாற்றினார்.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி, பிரதமர் மோடி, லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அதுமட்டும் இன்றி, லட்சத்தீவு பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சில கருத்துகளை பதிவிட்டார்.
லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால், இதற்கு மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். பணம் சம்பாதிப்பதற்காக இலங்கை போன்ற சிறிய நாட்டை இந்தியா காப்பி அடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்தியா குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறியது என்ன?
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை மாலத்தீவிற்கு பெரிய பின்னடைவை தரும் என்றும் லட்சத்தீவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்றும் மாலத்தீவு எம்பி கூறியிருந்தார். இதோடு நின்றுவிடாமல், பல ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, எம்.பி-யின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசிய மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், "லட்சத்தீவை மற்றொரு சுற்றுலா தலமாக மேம்படுத்தும் நோக்கில் மாலத்தீவின் மீதான கவனத்தை லட்சத்தீவின் மீது திசை திருப்ப பார்க்கிறது இந்தியா. கடற்கரை சுற்றுலாவில் மாலத்தீவுடன் போட்டியிடுவதில் இந்தியா குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது" என்றார்.
எம்.பி. ஜாஹித் ரமீஸ், மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் வரிசையில் மற்றொரு அமைச்சரான மரியம் ஷியூனா, இந்தியாவுக்கு எதிராக கடுமையாக பேசினார்.
மாலத்தீவு அரசு விளக்கம்:
கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், மாலத்தீவு எம்பியும் அமைச்சரும் தெரிவித்த கருத்து இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தியா குறித்து மாலத்தீவு எம்பி தெரிவித்த கருத்தை கடுமையாக கண்டித்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், "மாலத்தீவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றி வரும் கூட்டணி நாட்டின் தலைவரை நோக்கி மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியூனா பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த கருத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என முகமது முய்சு அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். இந்த கருத்துகள், அரசாங்கக் கொள்கையை பிரதிபலிக்காது என்று இந்தியாவுக்கு தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும்" என்றார்.
இதை தொடர்ந்து விளக்கம் அளித்த மாலத்தீவு அரசு, "வெளிநாட்டுத் தலைவர்களை பற்றி சமூக ஊடக தளங்களில் தரக்குறைவான கருத்துகள் பேசப்படுவதை மாலைதீவு அரசாங்கம் கவனித்து வருகிறது. இவை அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள். மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. மேலும், இதுபோன்ற தரக்குறைவான கருத்துக்களை வெளியிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகள் தயங்க மாட்டார்கள்" என தெரிவித்தது.
பெரும் அழுத்தத்தை தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியுனா, மல்ஷா மற்றும் ஹசன் ஜிஹான் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.