Kuwait Fire Accident: தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு: குவைத் விரையும் இந்திய வெளியுறவுத்துறை
குவைத் மங்காப் நகரில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
குவைத் மங்காப் நகரில் உள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு நடந்தது என்ன? இந்திய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்
அதிகாலையில் குவைத் கட்டடத்தில் பற்றிய தீ:
இன்று அதிகாலை குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் உள்ள சமையலறையில் முதலில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தீயானது கட்டடம் முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கிறது. தீயின் தீவிரத்தை உணர்ந்த பலர் , கட்டடத்தின் மாடியிலிருந்து கீழே குதித்தாகவும் கூறப்படுகிறது. சிலர் கட்டடத்திற்குள் மாட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கட்டடத்தில் சுமார் 160 பேர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்துக்காக வேலை பார்ப்பவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் 40 இந்தியர்கள் உட்பட 53 நபர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்திய தூதரகம் கண்காணிக்கிறது - பிரதமர்
இந்நிலையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது , தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், "குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தமளிக்கிறது.காயமடைந்தவர்களுக்கு நான் பிரார்த்தனை செய்கிறேன்.
அவர்கள் விரைவில் குணமடைய குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உதவி எண்கள் அறிவிப்பு:
Indian Embassy helpline number (+965-65505246) may be reached over by phone, whatsapp as well as whatsapp messages. https://t.co/MJAsPFGSuu
— India in Kuwait (@indembkwt) June 12, 2024
இந்நிலையில் குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம், உதவி எண்களை அறிவித்துள்ளது. குவைத் நாட்டில் உள்ள நபர்கள், இந்திய அரசை தொடர்பு கொள்ள ( (+965-65505246) ) இந்த எண்ணை அழைக்கவும். தொலைபேசி வாயிலாகவும் வாட்சப் செயலி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்ட அல்-அதான் மருத்துவமனைக்கு குவைத்துக்கான இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா சென்றார்.
அங்கு அனுமதிப்பட்ட இந்தியர்களைச் சந்தித்து முழு உதவியை செய்வதாக இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா உறுதியளித்தார்.
இணை அமைச்சர் குவைத் பயணம்:
தீ விபத்தில் காயம் அடைந்த இந்தியர்களுக்கு உதவுவதற்கு, மத்திய இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் குவைத் செல்லவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதை மேற்பார்வையிடவும், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களை விரைவாக திருப்பி அனுப்புவதற்கு, அங்கிருக்கும் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கே.வி.சிங் அவசரமாக குவைத் செல்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தில் தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகின்றனர், பலர் மீட்கப்பட்டனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தீயில் இருந்து புகையை சுவாசித்ததால் பலர் இறந்தனர்," என்று ஒரு காவல்துரை அதிகாரி தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டடத்தின் உரிமையாளர் கைது:
குவைத் துணைப் பிரதமர் ஷேக் ஃபஹத் அல்-யூசுப் அல்-சபா, சம்பவ இடத்தை பார்வையிட்டு, கட்டடத்தின் உரிமையாளரை கைது செய்ய உத்தரவிட்டார் என்று அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு :
விபத்தில், தமிழர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின், விவரங்களை பெற்று உதவுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்குள் உள்ளவர்கள் +91 18003093793 , வெளிநாட்டில் உள்ளவர்கள் +91 8069009900, +91 8069009901 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.