US Election: 100 ஆண்டுகளில் முதல்முறை.. அமெரிக்க அதிபர் தேர்தலில் திரும்பும் வரலாறு.. பைடனுக்கு திருப்பி தருவாரா டிரம்ப்?
அனைவரும் எதிர்பார்த்தது போல், அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்பது உலக நாடுகள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அமெரிக்க அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
எதிர்பார்ப்பை கிளப்பிய அமெரிக்க அதிபர் தேர்தல்:
அனைவரும் எதிர்பார்த்தது போல், அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பைடனுக்கும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்புக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் பைடனும், டிரம்பும் மாபெரும் வெற்றியை பதிவு செய்திருக்கின்றனர்.
ஜார்ஜியா, மிஸிஸிபி, வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் பைடன், டிரம்ப் ஆகியோருக்கு எதிராக அவர்களின் கட்சியின் சார்பில் யாரும் போட்டியிடவில்லை. உட்கட்சி தேர்தலில் டிரம்ப், பைடன் ஆகியோர் பெற்ற பெரிய வெற்றி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராவதற்கான பெரும்பான்மையை அவர்களுக்கு பெற்ற தந்தது.
அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட போதிலும், மக்கள் மத்தியில் இருவர் மீதும் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இருவரின் வயதும் அவர்களுக்கு தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவாக அமையும் என கருதப்படுகிறது.
நேருக்கு நேர் மோதும் பைடன் டிரம்ப்:
81 வயதான பைடன், அமெரிக்க வரலாற்றில் மிக வயதான அதிபர் ஆவார். அதேபோல, 77 வயதான டிரம்புக்கு எதிராக 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் டிரம்புக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
கடந்த 1912ஆம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக அதிபர்களாக இருந்தவர்கள் நேரடியாக மோதுகின்றனர். கடந்த தேர்தலில், பைடனின் வெற்றியில் கறுப்பினத்தவர் பெரும் பங்காற்றினர். கடந்த முறையை போன்று, இந்த முறையும் அவர் எந்தளவுக்கு கறுப்பின மக்களின் வாக்குகளை ஈர்க்கப் போகிறார் என்பது மிக பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
ஏன் என்றால், கடந்த முறை ஆதரவு அளித்த போதிலும், பதவியில் அமர்ந்த பிறகு, தங்களின் பிரச்னைக்கு பைடன் முக்கியத்துவம் அளிக்கவில்லை என கறுப்பினத்தவர் கருதுகின்றனர்.
சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகளில், கறுப்பினத்தவர் மத்தியில் பைடனுக்கான ஆதரவு குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. இது, ஜனநாயக கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. ஆனால், அனைத்து சவால்களையும் கடந்து கடந்த முறையை போல் இந்த முறையும் அதிபர் தேர்தலில் வெற்றிபெற பைடன் முனைப்பு காட்டி வருகிறார்.
இதையும் படிக்க: US Elections 2024: ரிப்பீட்டு.. அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை பழி தீர்ப்பாரா டிரம்ப்?