Trump Gaza: ஓய்ந்தது துப்பாக்கி, வெடிகுண்டுகள் சத்தம்.. அமலுக்கு வந்த காஸா அமைதி இப்பந்தம்? இஸ்ரேல் ஒப்புதல்
Trump Gaza Israel: ஹமாஸ் குழுவினரிடமிருந்து பிணயக்கைதிகளை விடுவிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Trump Gaza Israel: காஸா அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அமலுக்கு வந்த போர் நிறுத்தம்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த காஸா அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிகையானது ஹமாஸ் குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க வழிவகுக்கிறது. இந்த ஒப்புதலுடன், போர்நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டதாக CNN நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தனது பாதுகாப்புப் படைகளுக்கு தாக்குதலை நிறுத்த உத்தரவிட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை போர் நிறுத்தம் உண்மையாகும் பட்சத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் ஒலித்து வந்த துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளின் சத்தம் ஓய்ந்து, மக்கள் நிம்மதி பெற வாய்ப்பு உருவாகும்.
இஸ்ரேல் அரசு சொல்வது என்ன?
அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “கடந்த இரண்டு ஆண்டுகளில், எங்கள் போர் நோக்கங்களை அடைய நாங்கள் போராடியுள்ளோம். மேலும் இந்த போர் நோக்கங்களில் மையமானது பணயக்கைதிகளை திரும்பப் பெறுவதாகும். அதில் உயிருள்ளவர்கள் மற்றும் இறந்தவர்கள் என அனைவரும் அடங்குவர். நாங்கள் அதை அடையப் போகிறோம். அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர், ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் அசாதாரண உதவி இல்லாமல் நாங்கள் இதை அடைந்திருக்க முடியாது. அவர்கள் அயராது உழைத்தனர். இஸ்ரேலின் ராணுவ மற்றும் இராஜதந்திர முயற்சிகள் ஹமாஸை தனிமைப்படுத்தும் ஒருங்கிணைந்த அழுத்தத்தை ஏற்படுத்தி, இந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் காசாவிற்குள் நுழைந்த நமது வீரர்களின் தைரியத்தை வெகுவாக பாராட்டுகிறேன்," என்று கூறினார்.
விடையில்லா கேள்விகள்:
அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டம் அமலுக்கு வந்ததாக கூறப்பட்டாலும், பல முக்கிய கேள்விகளுக்கு தற்போது வரை பதில் கிடைக்கவில்லை. குறிப்பாக ஹமாஸ் படையினர் எப்படி ஆயுதங்களை கைவிட உள்ளனர்? காஸாவை நிர்வகிக்கப் போவது யார்? என பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அமைதியை நோக்கி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என இரண்டு தரப்பினரும் நகர்ந்து இருப்பது நம்பிக்கை அளித்துள்ளது. ட்ரம்ப் முன்வைத்த ஒரு சில அம்சங்கள் மட்டுமே தற்போது இரண்டு தரப்பினராலும், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளின்போது பிற அம்சங்களும் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், ட்ரம்ப் தலைமையிலான சர்வதேச குழு காஸாவை இடைக்கால அரசாங்கமாக நிர்வகிக்கும். முன்னதாக நேற்று அமைதி திட்டத்தின் முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தான நிலையிலும், காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.





















