Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
Old Pension Scheme: தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த ஆலோசனையில் ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்

அரசு ஊழியர்களும் அரசின் திட்டங்களும்
அரசு ஊழியர்கள் தான் அரசு அறிவிக்கும் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பாலமாக இருந்து வருகிறார்கள். எனவே அரசு ஊழியர்களுக்காக பல திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, மருத்துவம்,அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இருந்த போதும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அரசு ஊழியர்கள் - பழைய ஓய்வூதிய கோரிக்கை
பலமுறை காத்திருப்பு போராட்டத்தையும் அறிவித்தனர். இதனையடுத்து பழைய ஓய்வூதிய திட்ட பங்களிப்பு, ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயவும், மாநில அரசின் நிதி நிலையினை பணியாளர்களின் ஓய்வூதிய கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத்தக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழுவானது எந்த ஓய்வூதிய முறை சிறந்தது என்பது குறித்த 9 மாதங்களில் அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த குழு அரசு பணியாளர் சங்கங்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்தியதோடு, எல்ஐசி மற்றும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடனும் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி இடைக்கால அறிக்கையை கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது.
ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு
இந்த நிலையில் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்ட பங்களிப்பு, ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்களில் எது அரசு மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தொடர்பாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை ஆய்வு செய்தனர்.
3 அமைச்சர்கள் இன்று முக்கிய ஆலோசனை
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே தேர்தலுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு டிசம்பர் மாதம் இறுதிக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





















