US, Israel Vs Gaza: அமெரிக்கா சென்ற நெதன்யாகு; காசாவிற்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள் - போர் முடியுமா.? தொடருமா.?
நியூயார்க் சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசி போரை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் முயற்சி மேற்கொள்ள உள்ள அதே நேரத்தில், காசாவிற்கு இஸ்ரேலிய படைகள் ஆழமாக முன்னேறியுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா சபையின் பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு சென்றுள்ள அதே நேரத்தில், காசாவிற்குள் இஸ்ரேலிய படைகள் ஆழமாக ஊடுருவின. நியூயார்க் வந்திருக்கும் நெதன்யாகுவிடம் பேசிய, காசா போரை நிறுத்த ட்ரம்ப் முயற்சி எடுக்க உள்ள நிலையில், மறுபுறம் இஸ்ரேல் தாக்குதலையும் தொடர்வது நியாயமா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஏற்கனவே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் ட்ரம்ப்
இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவை நெதன்யாகு தக்கவைத்துள்ளார். ஐ.நா-வில் பேசிய ட்ரம்ப், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நடவடிக்கைகளால் ஹமாஸின் அட்டூழியங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிமாக உள்ளதாகவும், பிரச்னை தொடர்ந்துகொண்டே தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நெதன்யாகுவின் அமெரிக்க பயணம் ஒருபுறம் நடந்தாலும், காசா மீதான் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், பாலஸ்தீன பகுதியில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், மத்திய காசா பகுதியில் உள்ள ஜவைடா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில், 2 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் அடங்குவர் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இஸ்ரேலிய படைகள் உறுதிப்படுத்தாத நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியில் 170 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹமாசை ஒழித்துக்கட்டுவதற்காக, இஸ்ரேலிய டாங்கிகள் காசாவிற்குள் நுழைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் காசா விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் - அமெரிக்கா
பாலஸ்தீன போராளிக் குழுவின் கடைசி கோட்டை காசா நகரம் என்று நெதன்யாகு கூறுகிறார், ஆனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கேயே இருக்கிறார்கள், அவர்கள் செல்வதற்கு பாதுகாப்பான இடம் இல்லை என்று அஞ்சுகிறார்கள்.
நியூயார்க்கில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுடன் 21 அம்ச மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை டிரம்ப் பகிர்ந்து கொண்டதை அடுத்து, வரும் நாட்களில் காசா விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று வாஷிங்டன் நம்பிக்கை கொண்டுள்ளதாக அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் புதன்கிழமை தெரிவித்தார்.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையை இஸ்ரேல் இணைக்க அனுமதிக்க மாட்டேன் என்று அரபுத் தலைவர்களிடம் டிரம்ப் உறுதியளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. காசா மற்றும் கிழக்கு ஜெருசலேமைக் கொண்ட மேற்குக் கரையை ஒரு சுதந்திர பாலஸ்தீன நாடாக பாலஸ்தீனியர்கள் விரும்புகிறார்கள்.
பிரிட்டன், பிரான்ஸ், கனடா மற்றும் பிற நாடுகள் இந்த வாரம் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்த போதிலும், ஒருபோதும் பாலஸ்தீன நாடு இருக்காது என்று நெதன்யாகு அறிவித்துள்ளார். நெதன்யாகுவின் கூட்டணி கூட்டாளிகளில் சிலர் இஸ்ரேல் மேற்குக் கரையை இணைக்க விரும்புகிறார்கள்.
வெள்ளிக்கிழமை பொதுச் சபையில் உரையாற்றும் நெதன்யாகு, அடுத்த வாரம் டிரம்பை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இஸ்ரேலை விட்டு வெளியேறிய நெதன்யாகு, பாலஸ்தீன அரசை அங்கீகரித்த தலைவர்களை கண்டிப்பதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காசா போரை நிறுத்த ட்ரம்ப் முயற்சிக்கிறார் என கூறப்படும் நிலையில், அவர் இஸ்ரேலை ஆதரிக்கும் பட்சத்தில், போர் எப்படி முடிவுக்கு வரும் என்ற கேள்வியும் மறுபுறம் எழுகிறது. அதற்கு ஏற்றாற்போல் இஸ்ரேல் ராணுவமும் காசாவிற்குள் ஆழமாக ஊடுருவி வருகிறது. இதனால், இந்த போர் முடிவுக்கு வருமா.? அல்லது காசா அழிக்கப்படுமா என்பதே தற்போது எழுந்திருக்கும் கேள்வி.





















