"இதுவரை கொடுக்காத விலைய தர வேண்யிருக்கும்" ஹிஸ்புல்லா மீது கொலைவெறியில் இஸ்ரேல்.. இன்னொரு போரா?
சிரியாவில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் ராக்கெட் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் அமைந்துள்ள லெபனான் நாட்டின் தெற்கு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஹிஸ்புல்லா இயக்கம். கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசியல் இயக்கம் ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. இந்த இயக்கத்திற்கு முக்கிய ஆதரவாக இருந்து வருவது ஷியா பிரிவு இஸ்லாமிய மக்கள் ஆவர்.
விரிவடையும் காசா போர்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் முக்கிய எதிரியாக இருப்பது ஹிஸ்புல்லா இயக்கம்தான். ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு, ஆண்டுக்கு லட்சக்கணக்கான டாலர்களை ஈரான் வழங்கி வருவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வருகிறது.
ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையேயான போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு இடையே தினசரி மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல் மேலும் மோசமடைந்து வரும் நிலையில், காசா போர், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே மோதலை உண்டாக்குமோ என அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சிரியாவில் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் ராக்கெட் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏவப்பட்ட ராக்கெட் கால்பந்து மைதானத்தில் விழுந்ததாகவும், அதன் விளைவாக விளையாடிக்கொண்டிருந்த 12 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
கொதிக்கும் மேற்காசியா: ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு சென்ற இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட், ராக்கெட் தாக்குதலுக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றினார். "இதற்கு ஹிஸ்புல்லா தான் பொறுப்பு. அதற்கான விலையை அவர்களே கொடுப்பார்கள். எதிரியை கடுமையாக தாக்குவோம்" என அவர் தெரிவித்தார்.
ஆனால், குறிப்பிட்ட அந்த ராக்கெட் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என ஹிஸ்புல்லா இயக்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக, ஞாயிற்றுக்கிழமை ஒரே இரவே, லெபனான் எல்லைக்குள் ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேலிய போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், "ஹிஸ்புல்லாவால் ஏவப்பட்ட ராக்கெட்தான் தாக்குதலை நடத்தி இருக்கிறது என்பதை ஒவ்வொரு அறிகுறியும் தெரிவிக்கிறது" என்றார்.