Marriage Act: பெண்கள் திருமண வயதை 9-ஆக குறைக்க அரசு முடிவு - கொந்தளிக்கும் மக்கள், நெட்டிசன்கள் ஆவேசம்
Iraq Marriage Act: ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைப்பது தொடர்பான மசோதா கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Iraq Marriage Act: ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும், அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
”பெண்களின் திருமண வயது 9”
பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆகவும், ஆண் குழந்தைகளின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்கக் கூடிய சர்ச்சைக்குரிய மசோதா ஈராக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்புகளை பெற்றதால் திருமப்ப் பெறப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் கணிசமான உறுப்பினர்களை வைத்திருக்கும் ஷியைட் பிரிவின் ஆதரவுடன் அந்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஈராக்கில் உள்ள மதத் தலைவர்கள், தற்போதைய சட்டத்தை மீறி, குழந்தைத் திருமணங்கள் உட்பட, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பதிவு செய்யப்படாத திருமணங்களை நடத்துவதாக சன்பார் அமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் எச்சரித்தது. இந்நிலையில் தான், பெண்களின் திருமண வயதை குறைக்கும், மசோதாவை அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ளது.
ஈராக் அரசின் விளக்கம் என்ன?
சட்டப்பூர்வ திருமண வயதைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லை என மசோதாவை அறிமுகம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ரேட் அல்-மலிகி விளக்கமளித்துள்ளார். ஆனால், கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய திட்டங்களுக்கு இவர் முன்னோடியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ஓரினச்சேர்க்கை மற்றும் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளை குற்றமாக்க முன்மொழிந்தவர் இதே ரேட் அல்-மலிகி என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஆர்வலர்கள் கவலை:
ஈராக் அரசின் மசோதா நிறைவேற்றப்பட்டால், அந்நாட்டில் கடந்த 1959 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தனிநபர் அந்தஸ்து சட்டத்தின்படி, இஸ்லாமிய பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 என்ற விதி நீக்கப்படும் என ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், இந்த மாற்றம் பெண்களின் உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கும் மற்றும் நாட்டின் ஆழமான ஆணாதிக்க சமூகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
தொடரும் குழந்தை திருமணங்கள்:
குழந்தை திருமணம் என்பது ஈராக்கில் பல ஆண்டுகளாக ஒரு கவலையாக இருந்து வருகிறது. UNICEF இன் கூற்றுப்படி, 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 28 சதவிகிதம் பேர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர். கூடுதலாக, இவர்களில் 7 சதவிகிதம் பேர் 15 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர். ஈராக்கின் பெண்கள் உரிமைக் குழுக்கள் அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. பெண்களின் உரிமைகள் ஒடுக்கப்படும் மற்றும் குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். ஈராக் பெண் எம்.பிக்களின் கூட்டணியும் இந்த மசோதாவை எதிர்த்துள்ளது. ஈராக்கை தாண்டி உலக நாடுகளை சேர்ந்த நெட்டிசன்களும், இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த முடிவு, பெண் சமூகத்தை பின்னோக்கி அழைத்துச் செல்வதாகவும் ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.