Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
Iranian President Raisi: ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், யார் இந்த இப்ராஹிம் ரைசி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
விபத்தில் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு:
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர், கடும் மூடுபனியில் மலைப்பகுதியைக் கடக்கும்போது விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களும் இருந்தனர். 17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், அந்த ஹெலிகாப்டரில் பயணித்த யாருமே உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும், ரைசி உயிரிழந்துவிட்டதாகவும் உள்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த ரைசி யார்? அவரது பின்புலம் என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த இப்ராஹிம் ரைசி? - இளமை பருவம்
63 வயதான இப்ராஹிம் ரைசி ஈரானின் உச்ச தலைமையான அயதுல்லா அலி கமேனியின், இயற்கையான வாரிசாக கருதப்படுகிறார். நீதித்துறை மற்றும் மத அமைப்பில் ஆழமான தொடர்புகளை கொண்ட ரைசி, ஒரு கடுமையான மற்றும் மத ரீதியாக பழமைவாத அரசியல்வாதி ஆவார். 2017-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற இவர், 2021ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போது வெற்றி பெற்றார்.
ரைசி தனது 15 வயதில் புகழ்பெற்ற கோம் மத செமினரியில், அந்தக் காலத்தின் புகழ்பெற்ற மதகுருமார்களிடம் கல்வி கற்றார். 20-களின் முற்பகுதியில் ஒரு துணை வழக்கறிஞராக பணியாற்ற தலைநகர் தெஹ்ரானுக்குச் செல்லும் முன், பல்வேறு நகரங்களில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
1983 ஆம் ஆண்டில், அவர் மஷ்ஹத்தின் வெள்ளிக்கிழமை தொழுகை இமாம், அஹ்மத் அலமோல்ஹோடாவின் மகள் ஜமீலி அலமோல்ஹோடாவை மணந்தார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
ரைசி மீது அமெரிக்காவின் பொருளாதார தடைகள்:
1988 இல் ஐந்து மாதங்கள், அரசியல் கைதிகளின் மரணதண்டனைகளை மேற்பார்வையிடும் ஒரு குழுவில் அங்கம் வகித்தார். இது ஈரானிய எதிர்ப்பாளர்களிடையே அவரை பிரபலமடையச் செய்தது. அதோடு, அமெரிக்கா அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் வழிவகுத்தது. 1989 இல், ஈரானின் முதல் உச்ச தலைவர் அயதுல்லா ருஹோல்லா கொமேனியின் மரணத்திற்குப் பிறகு தெஹ்ரானின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மார்ச் 7, 2016 அன்று, கொமேனியின் மாற்றாக, அயதுல்லா கமேனியின் கீழ் ரைசி தொடர்ந்து உயர்ந்து, மஷாத்தின் மிகப்பெரிய மத அறக்கட்டளையான அஸ்தான் குட்ஸ் ரஸாவியின் தலைவராக ஆனார்.
இது ஈரானின் அரசமைப்பில் ரைசியின் நிலையை உறுதிப்படுத்தியது. இதனிடயே, JCPOA ஒப்பந்தம் மீதான அமெரிக்காவின் நிலைப்பாடும், அந்நாட்டின் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட ரைசியை தூண்டியது. இதனால், டிரம்ப் தலைமையிலான ஆட்சியிலும், ரைசி மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
அதிபர் தேர்தலில் போட்டி:
ரைசி முதன்முதலில் 2017ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஹசன் ரூஹானிக்கு எதிராக போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வியுற்றாலும், 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 62 சதவிகித வாக்குகளை பெற்று ரைசி அதிபரானார்.
ஆனால், அந்த தேர்தலில் பல சீர்திருத்தவாதிகள் மற்றும் மிதவாதிகள் நிற்கவிடாமல் தடுக்கப்பட்டதை அடுத்து, வெறும் 48.8 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானது குறிப்பிடத்தக்கது.
சமூக பிணைப்பில் ரைசி:
நாட்டின் மத ஸ்தாபனத்தில் ரைசியின் பிணைப்புகள் வலுவாக உள்ளன. மறைந்த கோமேனி மற்றும் பல மூத்த பதவிகளுக்கு அவரை நியமித்த காமேனியுடன் உறுதியான உறவுகள் உள்ளன. அரசாங்கம், ராணுவம் மற்றும் சட்டமன்றம் மற்றும் சக்திவாய்ந்த தேவராஜ்ய வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளுடனும் நல்ல உறவை கொண்டிருந்தார். இதனால், அடுத்த தேர்தலில் போட்டியிட்டால், ரைசி மீண்டும் அதிபராக அதிக வாய்ப்புள்ளதாகவும் கருதப்பட்டது.
ரைசியின் கொடுங்கோல் ஆட்சி?
அதேநேரம் ரைசி ஆட்சியில் சர்வாதிகார போக்கு நிலவியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஈரானின் அறநெறிப் போலீசாரின், காவலில் இருந்த மஹ்சா அமினியின் மரணம் குறித்து பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதிக்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. பெண்கள் தங்கள் ஹிஜாப்களை எரித்து, தங்கள் தலைமுடியை வெட்டி எதிர்ப்புகளை பதிவு செய்து, பல மாதங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2023 ஆம் ஆண்டின் மத்தியில் , வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புகளின்படி, பாதுகாப்புப் படைகள் போரட்டங்களை ஒடுக்கச் சென்றபோது சுமார் 500 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பேரணிகள் முடிவுக்கு வந்தன. கலவரத்தில் ஈடுபட்டதற்காக ஏழு பேர் தூக்கிலிடப்பட்டனர்.
போராட்டத்தை ஒடுக்கும்போது கொலை, சித்ரவதை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை, ஈரான் இழைத்ததாக கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்தது.