Iran Vs America: அமெரிக்காவுடன் பேசுவது தீங்கு விளைவிக்கும்; அது ஒரு முட்டுச்சந்து போன்றது - ஈரான் உச்ச தலைவர் காமேனி
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தீங்கு விளைவிக்கும் என்று ஈரான் உச்ச தலைவர் காமேனி விமர்சித்துள்ளார். மேலும், ஈரான் ஒருபோதும் அடிபணியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அணுசக்தி திட்டத்தை கைவிடாவிட்டால், மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று ஐரோப்பிய தலைவர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில், தாங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்க திட்டமிடவில்லை என்றும், அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கு தயாராக இல்லை என்றும், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவுடன் பேசுவது தீங்கு விளைவிக்கும்; அது ஒரு முட்டுச்சந்து“
இது குறித்து பேசியுள்ள காமேனி, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க திட்டமிடவில்லை என்றும், ஆனால், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்த முடியாது என்றும், அவற்றை முட்டுச்சந்து என்றும் விமர்சித்துள்ளார்.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், ஈரான் தற்போதுள்ள தடைகள் விவாரணத்தை தொடர விரும்பினால், அத்தகைய பேச்சுவார்த்தைகள் அவசியம் என்று கூறியிருந்தாலும், ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட எந்த காரணமும் இல்லை என்று காமேனி கூறியுள்ளார்.
அமெரிக்கா பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை முன்கூட்டியே அறிவித்துள்ளது என்று கூறிய அவர், இதன் விளைவாக அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் செறிவூட்டல் நிறுத்தப்பட்டது. இது ஒரு பேச்சுவார்த்தை அல்ல. இது ஒரு கட்டணை, ஒரு திணிப்பு என காமேனி சாடியுள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், நாம் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் அவர்கள் எதையும் செய்வார்கள் என்று அவர்கள் மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். அத்தகைய பேச்சுவார்த்தைகளை ஏற்றுக்கொள்வது என்பது, ஈரான் இஸ்லாமிய குடியரசு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிறது என்பதாகும், அதாவது, அச்சுறுத்தல்களுக்கு முன்பாக நாம் பயந்து சரணடைகிறோம் என்பதாகிவிடும் என தனது பதிவில் காமேனி தெரிவித்துள்ளார்.
Negotiating with the US is severely detrimental. They've threatened if we don’t negotiate, they’ll do this & that. Accepting such negotiations means Islamic Republic of Iran is susceptible to threats. It means we become frightened & surrender in the face of threats.
— Khamenei.ir (@khamenei_ir) September 23, 2025
“எங்களுக்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை“
மேலும், யுரேனியம் செறிவூட்டல் குறித்து விளக்கமளித்துள்ள காமேனி, யுரேனியம் செறிவூட்டலில் ஒரு மேம்பட்ட நிலையை எட்டியுள்ளதாகவும், அணு ஆயுதங்களை உருவாக்க இலக்கு வைக்கும் நாடுகள் 90 சதவீதம் வரை யுரேனியத்தை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டாலும், ஈரானுடையதை 60 சதவீதமாக மட்டுப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
ஈரான் ஆயுத தர அளவிற்கு செறியூட்டலை அதிகரிக்காது என்று கூறிய அவர், ஏனென்றால் எங்களுக்கு அத்தகைய ஆயுதங்கள் தேவையில்லை என்றும் அணு ஆயுதங்களைத் தொடர விரும்பவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
“அமெரிக்கா வசதிகளை அழிக்க முடியும், விஞ்ஞானத்தை அழிக்க முடியாது“
முன்னதாக நேற்று, அமெரிக்கா முன்னர் நடத்திய தாக்குதல் குறித்து குறிப்பிட்ட அவர், அவர்கள் வந்த இங்கும் அங்குமாக ஈரானிய செறியூட்டல் வசதிகள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். ஆனால், செறியூட்டல் என்பது விஞ்ஞானம். அந்த விஞ்ஞானத்தை அழிக்க முடியாது. குண்டுகள், மிரட்டல்கள் போன்றவை மூலம் விஞ்ஞானத்தை அழிக்கவே முடியாது என்று காமேனி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
They came and bombed [Iranian enrichment] facilities in this and that place. But enrichment is a science, and science cannot be destroyed. Science cannot be eliminated by bombs, threats, and such things.
— Khamenei.ir (@khamenei_ir) September 23, 2025





















