'சர்வாதிகாரிக்கு மரணம்'... ஹிஜாப்பை கழட்டி எறிந்து மாணவிகள் முழக்கம்... போராட்டத்தால் அதிர்ந்து போன ஈரான்
நெறிமுறை காவல்துறையின் கொடூரமான அடக்குமுறையை எதிர்த்து, தங்கள் ஹிஜாப்களை அகற்றி, ஆங்காங்கே பேரணிகளை நடத்தி வருகின்றனர் பள்ளி மாணவிகள்.
ஈரானில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற பெண் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தனது குடும்பத்துடன் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை காவல்துறை பிரிவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
A girls' school in Iran brought a member of the IRGC-run Basij paramilitary to speak to students. The girls welcomed the speaker by taking off their headscarves & chanting "get lost, Basiji".
— Kian Sharifi (@KianSharifi) October 5, 2022
Teenage girls have been at the forefront of protests for days.pic.twitter.com/kvskgB8qas
அந்த நேரத்தில், நெறிமுறை காவல்துறை பிரிவு மாஷா அமினியின் குடும்பத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டுள்ளது. அப்போது அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி அவரை கைது செய்து காவல்துறையினர் கொடூரமாக தாக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றும் மாஷா பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று சோதனை மேற்கொண்டதில் மருத்துவர்கள் மாஷா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் மாஷா உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த பெண்கள் மாஷாவின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்தினர். இது அங்கு மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், போராட்டத்திற்கு ஆதரவாக இணையதளங்கள் முடக்கப்பட்டது.
அமினியை தவறாக நடத்தினார், அடித்தார்கள் என்ற குற்றச்சாட்டுகளை ஈரானிய அலுவலர்கள் மறுத்துள்ளனர். மேலும், ஏற்கனவே இருந்த அவரின் உடல் நிலைமையின் காரணமாக அவர் மரணித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரது குடும்பத்தினர் இந்த கருத்துகளை மறுத்துள்ளனர்.
இந்நிலையில், ஈரானிய பள்ளி மாணவிகள் போராட்ட களத்திற்கு வந்துள்ளனர். நெறிமுறை காவல்துறையின் கொடூரமான அடக்குமுறையை எதிர்த்து, தங்கள் ஹிஜாப்களை அகற்றி, ஆங்காங்கே பேரணிகளை நடத்தி வருகின்றனர் பள்ளி மாணவிகள்.
தெஹ்ரானின் புகழ்பெற்ற ஷெரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கார் பார்கிங்கில் மாணவிகள் திரண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கலவர காவல்துறை அவர்களை மடக்கி பிடித்து அங்கிருந்து இழுத்து சென்றனர். போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் மாணவிகள், தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை கழட்டி, அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அலி கொமேனியை சாடும் விதமாக, 'சர்வாதிகாரிக்கு மரணம்' என மாணவிகள் முழக்கம் எழுப்பினர். வேறொரு மாணவிகள் குழு, "பெண்கள், உரிமை, சுதந்திரம்" என முழக்கம் எழுப்பினர்.