Iran Slams US: “அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து எங்களுக்கு எதிராக சதி“; வெளுத்து வாங்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர்
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தங்களுக்கு எதிராக சதி செய்வதாக, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம்சாட்டியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இஸ்ரேலின் தாக்குதலை மூடி மறைப்பதே, அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையின் நோக்கம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவ்விரு நாடுகளும் சேர்ந்து தங்களுக்கு எதிராக சதி செய்வதாகவும், அமெரிக்காவை நம்ப முடியாது என்றும் அவர் வெளுத்து வாங்கியுள்ளார். அது குறித்து விரிவாக காணலாம்.
அப்பாஸ் அரக்சியின் குற்றச்சாட்டுகள் என்னென்ன.?
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த போரில் இணைவது குறித்து, இரண்டு வாரங்களில் முடிவெடுப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த தருணத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்காவை நம்புவதா என்பதில் நிச்சயமற்ற நிலையில் தாங்கள் இருப்பதாக, ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.
அமெரிக்கா அளித்துள்ள 2 வார அவகாசத்தில், ஒப்பந்தத்தைமேற்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ட்ரம்ப் நிர்வாகம் தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் தங்கள் உறுதிப்பாட்டை காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையில் அமெரிக்கா உண்மையிலேயே தீவிரம் காட்டவில்லை என்றும், இதை இஸ்ரேலின் தாக்குதலை மூடி மறைக்கவே அவர்கள் பயன்படுத்துகிறார்கள் எனவும், இந்த திட்டம் ஏற்கனவே அவர்கள்(அமெரிக்கா, இஸ்ரேல்) மனதில் இருந்துள்ளது என்றும் அரக்சி குற்றம்சாட்டியுள்ளார்.
அதனால், இனிமேலும் அமெரிக்காவை நாங்கள் எப்படி நம்ப முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள அரக்சி, ராஜதந்திரத்திற்கு அவர்கள் துரோகம் செய்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே ட்ரம்ப் கூறியது என்ன.?
2 நாட்களுக்கு முன்பு பேசிய ட்ரம்ப், வரும் நாட்களில், அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறலாம், அல்லது நடக்காமலும் போவதற்கான கணிசமாக வாய்ப்புகளும் உண்டு என்ற உண்மையின் அடிப்படையில், தாக்குதல் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து 2 வாரங்களில் எனது முடிவை எடுப்பேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.
இதனிடையே, இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால், ஜெனிவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கலாம் என்று எண்ணியிருந்ததாகவும், ஆனால் தற்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என்றும் அரக்சி தெரிவித்தார்.
யுரேனியம் செறிவூட்டலை முற்றிலுமாக நிறுத்த முடியாது என்பதை, அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃபிடம் ஏற்கனவே தெளிவாக தெரிவித்து விட்டதாகவும், யுரேனியத்தை செறிவூட்டுவது ஒவ்வொரு நாட்டின் உரிமை என்றும் அரக்சி கூறியுள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தையாக இருந்தால் மட்டுமே அதில் கலந்துகொள்வோம் என்றும், ஆணையிடுவது போல் செயல்பட்டால் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அரக்சி.
அதோடு முக்கியமாக, ஈரானின் அணுசக்தி மையங்களை அமெரிக்கா அழித்தாலும், அதை மறுகட்டமைக்க தங்களால் முடியும் என்றும், அதற்காக அறிவும், தொழில்நுட்பமும் தங்களிடம் உள்ளதாகவும், அதை குண்டுகளால் ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி.
இறுதியாக, இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தாக்கினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, நாங்களும் திருப்பி அடிப்போம், போர் என்றால் இரு தரப்பும் தாக்குதல் நடத்தும் என்றும் தற்காத்துக் கொள்வது ஒவ்வொரு நாட்டின் உரிமை என்றும் அரக்சி உறுதிபடக் கூறியுள்ளார்.





















