(Source: ECI/ABP News/ABP Majha)
ரோஹிங்கியா முஸ்லீம் சிறுமியை நாடு கடத்தும் திட்டம் நிறுத்திய இந்தியா
இந்தியாவில் இருந்து 16 வயது ரோஹிங்யா முஸ்லீம் சிறுமியை மியான்மருக்கு நாடு கடத்தும் திட்டத்தை இந்திய அதிகாரிகள் கடைசி நிமிடத்தில் கைவிட்டனர்.
மணிப்பூரின் எல்லை மாவட்டமான தென்கனோபாலில் உள்ள அரசு அதிகாரி மாயாங்லாம்பம் ராஜ்குமார் இதுகுறித்து கூறுகையில்,"தற்போது, இதனை முன்னெடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். இருப்பினும், சிறுமியை நாடு கடத்தும் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறதா? (அ) முழுமையாக ரத்து செய்யப்படுகிறதா? என்ற விளக்கத்தை அவர் தெரிவிக்கவில்லை.
மேலும், அவர் கூறுகையில், "மியான்மரில் உள்ள சக அதிகாரிகளை தொடர்பு கொண்டோம். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்த பதில் விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அங்கு தகவல் தொடர்பு அமைப்புகள் செயலற்று உள்ளன" என குற்றம் சாட்டினார்.
மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், 16 வயது சிறுமையை மியான்மருக்கு நாடு கடத்த இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2017ம் ஆண்டு மியான்மரில் ரோஹிங்யா மக்கள் மீது இனவழிப்பு நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பிற தெற்காசிய நாடுகளில் தஞ்சம் அடையத் தொடங்கினர். இந்த 16 வயது சிறுமியும் அதில் அடங்குவார். இவரின், தந்தை முகமது ஜாபர் தற்போது வங்க தேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் தனது மகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," மியான்மருக்கு நாடு கடத்தும் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மலேசியாவில் நல்ல வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்பதே அவரின் விருப்பம்" என்று தெரிவித்தார்.