Crime: "சக எம்.பி.யால் பாலியல் தொந்தரவு"...நாடாளுமன்றத்தில் கண் கலங்கிய பெண் எம்.பி....!
ஆஸ்திரேலிய பெண் எம்.பி. ஒருவர் சக எம்.பி. மீது பாலியல் புகார் தெரிவித்திருப்பது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Australia : ஆஸ்திரேலிய பெண் எம்.பி. ஒருவர் சக எம்.பி. மீது பாலியல் புகார் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
"பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்”
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி. லிடியா தோர்ப் உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது, ”இந்த நாடாளுமன்ற கட்டடம் பெண்களுக்கு பாதுகாப்பாக பணி செய்யும் இடம் அல்ல. நான் இந்த நாடாளுமன்றத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன். என்னை விடாமல் பின்தொடர்வது, எனது உடலை அத்துமீறி தொடுவது, தகாத முறையில் பேசுவது போன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானேன்.
எனக்கு நடந்த இந்த சம்பவத்துக்கு பிறகு அலுவலகத்தைவிட்டு வெளியே செல்ல பயந்தேன். தனது அலுவலத்தில் இருந்து வெளியே செல்வதற்கு யாரெனும் இருக்கிறார்களா என்று உறுதி செய்து கொள்வேன். அதேபோன்று கட்டடத்தின் உள்ளே வரும் முன் பாதுகாப்பிற்காக என்னுடன் யாரையாவது வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்" என்று நாடாளுமன்றதில் கண்ணீர் மல்க பெண் எம்.பி. லிடியா தோர்ப் குற்றச்சாட்டினார்.
குற்றச்சாட்டை மறுத்த சக எம்.பி.
மேலும், ”பாலியல் வன்முறை என்பது வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விஷயங்களை குறிக்கிறது என்பது எனக்கு தெரியும். என்னை போன்று பாலியல் அத்துமீறல்களை அனுபவித்தவர்கள், தொழில் நலன்களுக்காக அதனை வெளியில் சொல்ல முன்வராதவர்களாக இருப்பதும் எனக்கு தெரியும்” என்று எம்.பி. லிடியா தோர்ப் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை மற்றொரு நாடாளுமன்ற எம்.பியான டேவிட் வான் மீது வைத்திருந்தார். ஆனால் இதில் உண்மையில்லை என்று எம்.பி. டேவிட் வான் மறுத்துள்ளார். எம்.பி. லிடியா தோர்ப் கூறிய குற்றச்சாட்டுக்கு நான் மனதளவில் நொறுங்கிவிட்டதாகவும், உண்மைக்கு புறம்பானதை எம்.பி. லிடியா கூறுவதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கட்சியும் டேவிட் வானை இடைநீக்கம் செய்துள்ளது.
"3 இல் 1 பங்கினருக்கு பாலியல் தொந்தரவு”
ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத்திற்குள் பாலியல் புகார்கள் 2021ஆம் ஆண்டில் இருந்து வந்தன. அப்போது, அரசியல் உதவியாளர் பிரிட்டானி ஹிக்கின்ஸ், கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிகாரி ஒருவர் நாடாளுமன்றத்திற்குள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் இந்த விவகாரம் தொடர்பாக தனித்தனியே 5 விசாரணைகள் நடைபெற்றன. இந்த வழக்கு நாடு தழுவிய போராட்டத்திற்கு வழிவகுத்தது. இந்த வழக்கு இறுதியில் முறையற்ற வகையில் விசாரணை நடந்ததாக தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், ஹிக்கின்ஸ் மன நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மறு விசாரணை செய்யப்படவில்லை.
அப்போது நடந்த விசாரணையில் ஆஸ்திரேலியா அரசியலில் உள்ள பெண்களுக்கு எதிரான நிலையை கடுமையாக விமர்சித்தது. அதன்படி, நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 3 இல் 1 பங்கினர் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஒரு முறையாவது ஆளானதாகவும், இவற்றில் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 63 சதவீதம் பெண் உறுப்பினர்கள் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.