ISRO SpaDex: விண்வெளியில் சாதனை படைக்கப்போகும் இஸ்ரோ..! டாக்கிங்? உலகின் நான்காவது நாடெனும் பெருமை சாத்தியமாகுமா?
ISRO SpaDex: நடப்பாண்டில் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ள கடைசி விண்கலம், சர்வதேச அளவில் இந்தியாவை ஒரு தனித்துவமான பட்டியலில் இணைக்க உள்ளது.
ISRO SpaDex: உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே, இரண்டு விண்கலங்கள் அல்லது செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் திறனைக் கொண்டுள்ளன.
PSLV-C60 விண்கலம்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வரும் 30ம் தேதி PSLV-C60 ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த உள்ளது. PSLV-C60/SPADEX விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து திங்கட்கிழமை இரவு 9.58 மணிக்கு ஏவப்பட உள்ளது. நடப்பாண்டில் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ள இந்த கடைசி விண்கலம் மூலம், சர்வதேச அளவில் இந்தியா ஒரு தனித்துவமான பட்டியலில் இணையும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
விண்வெளியில் செயற்கைகோள்களை இணைக்கும் திறன்:
உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இரண்டு விண்கலங்கள் அல்லது செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் திறனைக் கொண்டுள்ளன. இந்நிலையில், வரும் டிசம்பர் 30 ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டின் கடைசி விண்கலமான SpaDeX, இரண்டு தனித்தனி சுதந்திரமாக பறக்கும் விண்வெளி வாகனங்களை இணைக்கும் (Space Docking Experiment - SpaDex) பணியை மேற்கொள்ள உள்ளது.
டாக்கிங் என்றால் என்ன?
விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு முறையும், குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்பவர்கள், தாங்கள் பயணிக்கும் விண்கலம் அல்லது காப்ஸ்யூலை, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்க (டாக்கிங்) வேண்டும். அப்படி செய்ததும், இரண்டு பொருட்களும் பாதுகாப்பாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பின்னரே, விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தின் அழுத்தப்பட்ட (Pressurised) அறைக்குள் செல்ல முடியும்.
விண்வெளியில் டாக்கிங் என்பது மிகவும் கடினமான மற்றும் சிக்கலான நடைமுறைகளில் ஒன்றாகும். சிறிய பிழை கூட பேரழிவிற்கு வழிவகுக்கும். இண்டர்ஸ்டெல்லர் படத்தில் கூட, இந்த டாக்கிங் செயல் எவ்வளவு கடினமானது என்பதை தத்ரூபமாக காட்டியிருப்பார்கள். படத்தில் காட்டியபடியே, நிலையாக இருக்கும் லேண்டர் அமைப்புடன், புவியில் இருந்து செல்லும் கொரியர் விண்கலம் இணைய வேண்டும்.
If you think parallel parking is difficult...
— Universal Curiosity (@UniverCurious) September 16, 2019
This is a 7 km per second space dance between Soyuz capsule and the ISS. This video shows the last 15 minutes of the docking procedure.
Credit: NASA/Roscomos pic.twitter.com/roR7BbXzvL
இந்தியாவின் SpaDex
மேற்குறிப்பிடப்பட்ட சிக்கலான பணியை தான் வரும் 30ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ள SpaDex விண்கலம் மேற்கொள்ள உள்ளது. அதன்படி, இந்த விணகலத்தில் சேசர் (SDX01) மற்றும் டார்கெட் (SDX02) எனும் இரண்டு அமைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றும் 220 கிலோகிராம் எடை கொண்டவையாகும். பெயர்கள் குறிப்பிடுவது போல, இரண்டு அமைப்புகளும் அதிவேகமாக பூமியைச் சுற்றி வரும் வேளையில், சேசர் அமைப்பு டார்கெட் அமைப்பை துரத்தி விரைவாக அதனுடன் இணைய வேண்டும் என்பதும் பணியின் நோக்கமாகும்.
தரைக்கட்டுப்பாடு:
பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட ஊள்ள இரண்டு விண்கலங்களும், பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 470 கிமீ உயரத்தில் பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த உள்ளது. இரண்டு விண்கலங்களின் சாய்வு பூமியை நோக்கி 55 டிகிரியில் இருக்கும். தொடர்ந்து, 24 மணி நேரம் கழித்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, விஞ்ஞானிகள் சிக்கலான மற்றும் துல்லியமான டாக்கிங் மற்றும் பிரிக்கும் பணியை நிகழ்த்த உள்ளனர்..
பணியின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:
- இரண்டு சிறிய விண்கலங்கள் சந்திப்பதற்கும், இணைவதற்கும், பிரிவதற்கும் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கி செயல்படுத்தி பார்க்க வேண்டும்
- ஸ்பேஸ் ரோபோட்டிக்ஸ் போன்ற எதிர்காலப் பயன்பாடுகளுக்கு இன்றியமையாத, இணைக்கப்பட்ட விண்கலங்களுக்கு இடையே மின்சார சக்தி பரிமாற்றத்தின் முன்னோட்டம்.
- கலப்பு விண்கலக் கட்டுப்பாடு அதாவது விண்வெளியில் மட்டுமின்றி தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தும் கட்டுப்படுத்துவது
- பிரிக்கப்பட்ட பிறகு பேலோட் செயல்பாடுகள்.
இந்த பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்தால், விண்வெளி தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமுள்ள தனித்துவமான பட்டியலில் இந்தியா இணையும். இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் திறனுக்கு இந்த பணி முக்கியமானது. இது இந்தியாவின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை வாகனம், அதாவது நாசாவின் சின்னமான விண்வெளி விண்கலத்தின் இந்தியாவின் மாறுபாடாக திகழும். எதிர்காலத்தில் டாக்கிங் திறனையும் வழங்கும்.