Trump Hamas: இஸ்ரேலை நம்பமாட்டோம், வாக்குறுதி கொடுங்க ட்ரம்ப் - ”எங்களுக்கு இது தான் தேவை” - ஹமாஸ்
Trump Hamas: காஸா அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள சில உத்தரவாதங்களை அளிக்க வேண்டும், என ஹமாஸ் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Trump Hamas: காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறுவதற்கு ஏற்ப பணயக்கைதிகளை விடுவிக்க தயார் என ஹமாஸ் குழு வலியுறுத்தியுள்ளது.
முடிவில்லாமல் முடிந்த பேச்சுவார்த்தை
காஸா பகுதியில் அமைதியை நிலைநாட்ட, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 20 அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அமைதி ஒப்பந்தத்தை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். இதனை செயல்படுத்துவது தொடர்பாக, இருதரப்பினருக்கும் இடையேயான மறைமுக பேச்சுவார்த்தை இரண்டாவது நாளாக நேற்றும் எகிப்தில் நடைபெற்றது. ஆனால், அது முடிவு எட்டப்படாமல் முடிவுற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியதன் இரண்டாவது ஆண்டின் நினைவு நாளில், வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், காஸா ஒப்பந்தத்திற்கு உண்மையான வாய்ப்புள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
ஹமாஸ் சொல்வது என்ன?
ஹமாஸ் குழுவினர் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற அமைதி ஒப்பந்தத்தின் ஒரு அம்சத்தை எதிர்க்கும் விதமாக, “பாலஸ்தீன மக்களின் ஆயுதங்களை விட்டுக்கொடுக்க அறிவுறுத்த யாருக்கும் உரிமை இல்லை" என்று ஹமாஸ் குழு வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், போரை முடிவுக்கு கொண்டு வருவதுடன், உடனடியாக காஸாவில் இருந்து இஸ்ரேல் படை முற்றிலுமாக வெளியேற ஹமாஸ் வலியுறுத்துகிறது. ஆனால், இஸ்ரேலிய படைகள் வெளியேறுவது குறித்து டிரம்பின் திட்டம் தெளிவற்றதாக உள்ளது, படிப்படியாக வெளியேறுவதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்கவில்லை. இதனை கருத்தில் கொண்டு, இஸ்ரேலிய படைகள் வெளியேறுவதற்கு ஏற்ப தங்கள் வசம் உள்ள, பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் குழு திட்டமிட்டுள்ளதாம்.
”உத்தரவாதம் அளிக்க வேண்டும்”
எகிப்திய ஊடகத்திற்கு பேட்டியளித்த ஹமாஸ் குழுவைச் சேர்ந்த ஒருவர், “இஸ்ரேல் ஏற்கனவே இரண்டு முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. எனவே, போர் முடிவுக்கு வரும், மீண்டும் தொடங்கப்படாது என்பதற்கான உண்மையான உத்தரவாதங்களை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனிய தேசிய தொழில்நுட்ப அமைப்பின் மேற்பார்வையின் கீழ் ஒரு விரிவான மறுசீரமைப்பு செயல்முறையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் ஹமாஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது. முதல் நாள் பேச்சுவார்த்தை காரசாரமாக இருந்தாலும், இரண்டாவது நாள் விவாதம் நேர்மறையான விதத்தில் நல்ல முன்னேற்றத்தை கண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது நாள் பேச்சுவார்த்தையில், அமெரிக்க அதிகாரி மற்றும் கத்தார் பிரதமர் ஆகியோர் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் சொல்வது என்ன?
பேச்சுவார்த்தை தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பொதுவெளியில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேலியர்கள் முடிவெடுக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நாட்களில் இருக்கின்றனர்.
போரின் அனைத்து நோக்கங்களையும் அடைய நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்: அனைத்து பணயக்கைதிகளையும் திரும்பப் பெறுதல், ஹமாஸின் ஆட்சியை ஒழித்தல் மற்றும் காஸா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்ற உறுதிமொழி" என நேதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.





















