Say No To Plastic : 'ஆக்கும் அறிவியல் அழிக்கவும் செய்யும்' பிளாஸ்டிக் பிடியில் சிக்கித் தவிக்கும் உலகம்..!
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு ஆண்டுகள் ஆனாலும், தடை விதிக்கவே முடியாத வகைகளிலெல்லாம் பிளாஸ்டிக் நமது வாழ்க்கை முறையில் கலந்துவிட்டது
அறிவியல், மானுடத்திற்கு பலதரப்பட்ட கண்டுபிடிப்புகளின் வழி எண்ணிலடங்கா நன்மைகளை செய்தாலும் அதன் அதீத பயன்பாடுகள் மொத்த சுற்றுசூழல் அமைப்பிலும் பல நூற்றாண்டு பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளில் ஒன்று பிளாஸ்டிக்.
பிளாஸ்டிக்கின் தாக்கம்
பிரஞ்சம். தனக்கு தீங்கினை விளைவிக்கும் ஒவ்வாதவற்றை இயற்கையின் துணை கொண்டு இப்பிரபஞ்சத்தை விட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியேற்றிக் கொள்ளும் என்பது இயற்கையின் அறம் சார்ந்த நெறியாக சொல்லப்படுவதுண்டு. எனினும் மனிதன் அறிவியலின் துணை கொண்டு உருவாக்கிய, வாழ்க்கைக்கு தேவையானதை எளிமையாக்கி கொள்ளும் பொருட்டு கண்டுபிடித்தவற்றில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முக்கிய இடமுண்டு. சில கண்டுபிடிப்புகள் சுற்றுச் சூழலை பாதித்து இயற்கையின் இயல்பான சுழற்சியில் ஏற்படுத்தும் மாற்றங்கள், பின் வரும் தலைமுறைகளின் வாழ்க்கை முறையையே மாற்றியமைக்க கூடியதாக இருக்கும். பல்வேறு எளிய பயன்பாடுகளை கொண்டு பல்வேறு மூலப்பொருட்களுக்கு மாற்றானதாக பார்க்கப்படுகிறது பிளாஸ்டிக். அவ்வாறாக பயன்படுத்தபட்டுக் கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக் பொருட்கள் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும், ஏற்படுத்த போவதாகவும் சொல்லப்படும் பாதிப்புகள் எண்ணிலடங்கா.
பாதிப்புகளை குறைக்க முயலும் அறிவியல்
சுற்றுசூழல் அமைப்பிலும், மனித வாழ்க்கை முறையிலும் ஏற்படுத்தி இருக்கும் இறுக்கத்தினை தளர்த்துவது போல அறிவியலில் பல்வேறு சீரிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் குறிப்பிடப்படும் நிகழ்வுகளில் ஒன்று ப்ளாஸ்டிக் பொருட்களின் மக்கும் தன்மையின் கால அளவை குறைப்பதற்கான முயற்சி. பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் விஞ்ஞான அமைப்புகளும் பலதரப்பட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வபோது முன்னேற்றம் குறித்த தகவல்கள் வந்த வண்ணமிருந்தாலும் காத்திரமான பயன்பாட்டுக்கானதாக இல்லாமல் முயற்சியின் முன்னேற்றமாக பார்க்கப்பட்டு வருகிறது.
புதிய முன்னேற்றம்
தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்படும் சிறப்பு நொதிகள், மேற்சொன்னவாறு இல்லாமல் கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வருமென நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்ஸாஸ் யுனிவர்சிட்டியை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு பலதரப்பட்ட ஆராய்சிகளுக்கு பின் இதனை கண்டுபிடித்துள்ளனர். புதிய வகை நொதித் தொகுதிகள் பிளாஸ்டிக் பொருட்களின் மூலகூறுகளில் சில விளைவுகளை ஏற்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களின் மக்கும் காலத்தினை பல ஆண்டுகளில் இருந்து சில நாட்களாக குறைப்பதாக தெரிவிக்கிறார்கள்.
நம்பிக்கை
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நொதிகள் என்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டு பிளாஸ்டிக் மக்குதலில் குறிப்பிட்ட நல்விளைவுகளை ஏற்படுத்தி நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் கொடுத்த நொதிகளின் மீது மேலும் சில மாறுதல்களை செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு குறித்த விவரங்களை நேச்சர் ( Nature ) இதழ் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நொதிகளில் உள்ள குறிப்பிட்ட புரதங்கள் துரிதமாக செயல்பட்டு பாலிஎத்திலீன் தெரஃப்தலேட் [polyethylene terephthalate (PET)] கட்டமைப்புகளின் மூலக்கூறுகளை உடைத்து மக்கும் கால அளவை குறைப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலமாக, அடிப்படை பிளாஸ்டிக் மூலக்கூறாக மாற்றி, மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க அதனை பயன்படுத்தலாம். இதன் மூலமாக மீண்டும் மீண்டும் புதிதாக பிளாஸ்டிக் பொருட்களுக்காக அடிப்படை மூலக்கூறுகள் உருவாக்கப்படுவது குறைக்கப்பட்டு பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு ஆண்டுகள் ஆனாலும், தடை விதிக்கவே முடியாத வகைகளிலெல்லாம் பிளாஸ்டிக் நமது வாழ்க்கை முறையில் கலந்துவிட்டது. இத்தகைய கண்டுபிடிப்பை சுற்றுச்சூழலுக்கு கேடில்லா வகையில் அழிப்பதற்கு மற்றுமொரு ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் மகிழ்ச்சிதானே..