Beer-oil Exchange: 'பணம் வேண்டாம்.. சமையல் எண்ணெய் கொடுங்க.. பீர் பாட்டிலை எடுங்க' - அதிரடி ஆஃபரை அளித்த பார் நிறுவனம்!
சூர்யகாந்தி எண்ணெய் அளித்தால் மதுபானம் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகள் பொருளாதாரம் சார்ந்த பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக இந்தப் போர் காரணமாக பல நாடுகளில் சூர்யகாந்தி எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இதை சமாளிக்க பல்வேறு வழிகளை நாடுகள் கையாண்டு வருகின்றன.
இந்நிலையில் ஜெர்மனியின் முனிச் நகரிலுள்ள பிரபல ப்ரூஹப் பார் நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி தங்களுடைய பார்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பணத்திற்கு பதிலாக சூர்யகாந்தி எண்ணெய் கொடுத்தால் மதுபானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:பேச்சுவாக்குல சம்பள விவரத்தை வெளியே சொன்ன பெண்! வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்!
எந்த அளவிற்கு வேண்டுமானாலும் சூர்யகாந்தி எண்ணெயை கொடுத்துவிட்டு தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப மதுபானத்தை எடுத்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக அந்த பாரின் மேலாளர், “எங்களுக்கு சூர்யகாந்தி எண்ணெய் கிடைப்பது சிக்கலாக உள்ளது. ஒரு வாரத்திற்கு 30 லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால் அதில் எங்களுக்கு 15 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. இதன்காரணமாக உணவு பொருட்கள் தயார் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
அந்தவகையில் தற்போது எங்களுக்கு சமைக்கவே சூர்யகாந்தி எண்ணெய் இல்லை. ஆகவே தான் இந்தப் புதிய முடிவை எடுத்தோம். இதன்மூலம் சற்று எண்ணெய் பற்றாகுறையை போக்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் ஒரு லிட்டர் பீர் பாட்டீல் சுமார் 7 யூரோவிற்கு விற்கப்படுகிறது. அதாவது இந்திய ரூபாயில் 560 ரூபாய்க்கு பீர் பாட்டீல் விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் சூர்யகாந்தி எண்ணெய் 4.5 யூரோவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் இது 364 ரூபாயாக உள்ளது. எனவே வாடிக்கையாளர்களுக்கு இது சிறப்பான ஆஃபராக அமைந்துள்ளது. இதை பயன்படுத்த பலரும் ஆர்வமாக உள்ளனர்.
இந்த ஆஃபர் தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவர், “இது நல்ல ஆஃபராக உள்ளது. நான் கடந்த வாரம் உக்ரைன் சென்ற போது அங்கு 80 லிட்டர் சூர்யகாந்தி எண்ணெய் வாங்கி வந்தேன். அந்த 80 லிட்டர் சூர்யகாந்தி எண்ணெயை தற்போது இந்த ஆஃபரின் மூலம் மாற்றி பீர் பாட்டீல்களை வாங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த புதிய ஆஃபர் பல்வேறு நபர்களிடம் இருந்து வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்