அரசியலில் டக் அவுட்டான தில்ஷான்.. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்விய முன்னாள் கேப்டன்!
இலங்கை கிரிக்கெட்டில் அதிரடிக்கு பெயர் போன தில்ஷான், சமீபத்தில்தான், சஜித் பிரேமதாசாவின் கட்சியில் இணைந்தார். தற்போது இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya) சார்பாக போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன தில்ஷான் தோல்வி அடைந்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலை தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) தற்போது வரை, 159 இடங்களை கைப்பற்றி இருக்கிறது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி, குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் கட்சியாகும்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் பாரம்பரிய அரசியல் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கலுதாரா மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலகரத்ன தில்ஷான் தோல்வி அடைந்துள்ளார்.
தில்ஷான் தோல்வி: இலங்கை கிரிக்கெட்டில் அதிரடிக்கு பெயர் போன தில்ஷான், சமீபத்தில்தான், சஜித் பிரேமதாசாவின் கட்சியில் இணைந்தார். இலங்கை கிரிக்கெட் அணிக்காக கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் விளையாடிய தில்ஷான், கொஞ்ச காலம் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், 2014ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற இலங்கை அணியில் அங்கம் வகித்தார்.
இலங்கை அணிக்காக 87 டெஸ்ட், 329 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு, சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த 2015ஆம் ஆண்டு, அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு தில்ஷான் தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில், ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கட்சியில் இணைந்தார்.
சமீபத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் SJB கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.