World Mother Tongue Day: இன்று சர்வதேச தாய்மொழி தினம்.. ஏன் அனுசரிக்கப்படுகிறது? முக்கியத்துவம் என்ன?
தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. பன்மொழி கலாச்சாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.
பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக அனுசரிப்பது குறித்து கடந்த 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பில் நடைபெற்ற, பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கோவால் சர்வதேச தாய்மொழி தினத்தன்று குறிப்பிட்ட தலைப்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த ஆண்டும், சிறுவயதுக் கல்வியிலிருந்தும் அதற்கு பின் பல மொழிச் சூழல்களில் கல்வியை மாற்றுவதற்கான ஒரு தேவையாக பன்மொழிக் கல்வியை மேம்படுத்துதல்; வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழல்களிலும், அவசரகால தேவைகள் உட்பட நெருக்கடியான நிலைகளிலும் பன்மொழிக் கல்வி மற்றும் பன்மொழி மூலம் கற்றலை ஆதரித்தல்; அழிந்து வரும் அல்லது அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு உள்ளான மொழிகளுக்கு புத்துயிர் அளித்தல் ஆகியவை கருப்பொருளாக கொண்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
யுனெஸ்கோ அறிக்கையில், தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், ''அனைத்து தரப்பும் தாய்மொழியில் கல்வி கற்பதை உறுதி செய்ய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என கூறியுள்ளது.
இந்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில், இந்தியாவில் பேச்சு வழக்கில் 121 மொழிகளும், 270 தாய்மொழிகளும் இருக்கின்றன என்பது தெரிய வந்தது. அகில இந்திய அளவில் ஒரு மொழியைப் பேசும் 10,000 மக்களை பிரித்து பார்ப்பதன் மூலமாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள மொழிகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. முதலாவதாக அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள், இரண்டாவதாக அந்த அட்டவணையில் சேர்க்கப்படாத தாய்மொழிகள் ஆகும். நாட்டில் மொத்தம் வரையறுக்கப்பட்ட பிரிவில் 123 மொழிகளும், வரையறை செய்யப்படாத பிரிவில் 147 தாய் மொழிகளும் இருக்கின்றன.
தமிழ், ஹிந்தி, உருது, அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, ராஜஸ்தானி, கன்னடம், கொங்கனி, மலையாளம், பஞ்சாபி உள்ளிட்டவை எட்டாவது அட்டவணையில் பட்டியல் இடப்பட்டிருக்கும் தாய் மொழிகளாகும். இது தவிர மராத்தி, கர்வாலி, சட்டீஸ்கரி, மைதிலி, மார்வாரி, டோக்ரி, பகாரி, சம்பல்புரி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.
2011ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட மொத்த மொழிகள் குறித்த பட்டியலின் அடிப்படையில் நாட்டிலுள்ள 96.71 சதவீத மக்கள் ஏதேனும் ஒரு வரையறை செய்யப்பட்ட மொழியை தாய்மொழியாக கொண்டுள்ளனர். மொழியின் தொன்மையை அடிப்படையாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கபட்டுள்ளன.
இன்றைக்கு உலகம் முழவதும் 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாச்சாரமும், அறிவு சார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் மொழிகளை இணைப்பதும் கற்றல் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் இன்றியமையாதது.