துப்பாக்கியால் தாயை சுட்டுக் கொன்ற குழந்தை... கைதானார் தந்தை!
தந்தையின் துப்பாக்கியை எடுத்த குழந்தை அறியாமல் தாயை சுட்டுக்கொன்றதால் கவனக்குறைவாக துப்பாக்கியை வைத்திருந்ததால் தந்தை மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர் புளோரிடா காவல்துறை.
தாய் ஷமயா லின் தனது வேலை தொடர்பான ஜூம் விடியோ காலில் இருந்திருக்கிறார். அந்நேரதில் குழந்தை தனது பையில் தனது தந்தை வென்ட்ரே அவேரியுடைய துப்பாக்கியை கண்டுள்ளது. அதனை எடுத்த குழந்தை ஷமயா லின்னை சுட்டு கொன்றுள்ளது. 22 வயதாகும் அவெரி படுகொலை மற்றும் துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்க தவறியது ஆகிய வழக்கின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். நீதிமன்ற பதிவுகளின் படி, அவர் வாதாட இன்னும் வழக்கறிஞர் யாரையும் நியமிக்கவில்லை என்றும், அவர் அதற்கான மனுவும் கொடுக்கவில்லை என்றும் தெரிகிறது. அறியாமல் செய்துவிடும் கொலைக்கு அமெரிக்காவில் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். திரு அவெரியும் 15 வருட சிறை மற்றும் 10,000 டாலர் அபராதத்தை தண்டனையாக பெறுவார்.
அல்டமோன்டே ஸ்பிரிங்ஸ் காவல்துறையினரின் கூற்றுப்படி, "தம்பதியினரின் படுக்கையறையின் தரையில் கிடந்த குழந்தையின் பைக்குள் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. உயிருக்கு ஆபத்தான துப்பாக்கி பாதுகாப்பாக வைக்கப்படவில்லை. கைக்குழந்தை ஆயுதத்தை எடுத்து, தாயின் பின்னால் சென்று துப்பாக்கியால் சுட்டிருக்கிறது" என்று அவர்கள் கூறினர். ஜூம் வீடியோ காலில் லின்னுடன் பணிபுரிபவர்களில் ஒருவர் அவசர உதவி மையத்திற்கு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி சம்பவம் நடந்த பின்பு அழைத்திருக்கிறார். பலத்த சத்தம் கேட்டதாகவும், லின் பின்னோக்கி விழுந்ததாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார். "ஒரு பெண் இறந்து விழுந்துவிட்டார் ... அவருடன் ஜூம் காலில் நான் இருந்தேன். அவரது குழந்தை பின்னால் அழுது கொண்டிருந்தது" என்று உள்ளூர் ஊடகங்களுக்கு காவல்துறை வெளியிட்ட அழைப்பின் ரெக்கார்டிங்கில் சக ஊழியர் பதற்றத்துடன் கூறியுள்ளார்.
திரு அவேரி வீடு திரும்பியபோது, தனது மனைவி தரையில் இரத்தம் வழிய வீழ்ந்து கிடப்பதை கண்டார். அவர் போலீஸை அழைத்து மருத்துவர்களை அழைத்து வருமாறு கூறியிருக்கிறார். அழைப்பின் போது, தான் சற்று நேரம் முன்புதான் வீடு திரும்பியதாகவும், என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினார். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் லின்னை காப்பாற்ற முயன்றனர், ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டாள். "அந்த துப்பாக்கிகளை கவனித்துக்கொள்ள துப்பாக்கி உரிமையாளராக உங்களுக்கு பொறுப்பு உள்ளது. நாம் செய்யும் காரியம் தான் விளைவுகளுக்கு காரணம் ஆகிறது, துப்பாக்கி போன்ற உயிருக்கு ஆபத்தான பொருட்களை கவனமாக வைத்திருங்கள்" என்று அல்டாமொண்டே ஸ்பிரிங்ஸ் போலீஸ் அதிகாரி ராபர்டோ ரூயிஸ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். சம்பவத்தின் போது வீட்டில் இருந்த தம்பதியின் இரண்டு குழந்தைகளுக்கும் காயம் ஏற்படவில்லை. இருவரும் இப்போது மற்ற குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில் உள்ளனர். நவம்பர் 23 அன்று திரு அவெரி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.