England Election 2024: இங்கிலாந்து தேர்தலில் களம்கண்ட தமிழ் வேட்பாளர்கள் நிலை என்ன? முதல் தமிழ் எம்.பி. யார்?
England Election 2024: இங்கிலாந்து நாடாளுமன்ற பொதுதேர்தலில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளி வேட்பாளர்களின் நிலை என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
England Election 2024: இங்கிலாந்து நாடாளுமன்ற பொதுதேர்தலில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளி வேட்பாளர்களில், உமா குமரன் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல்:
இங்கிலாந்து நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பழமைவாத கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரம், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 400-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் தகுதி பெற்றுள்ளது.
விரைவில் கெய்ர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 8 பேர் போட்டியிட்டனர். அவர்களின் நிலை என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
வரலாறு படைத்த உமா குமரன்:
தொழிலாளர் கட்சி சார்பில், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவ் தொகுதியில் போட்டியிட்ட, தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் 19,145 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட, தமிழ் வம்சாவளியை சேர்ந்த முதல் எம்.பி., என்ற பெருமையை உமா குமரன் பெற்றுள்ளார். இவரது பெற்றோர் இலங்கையின் ஆயுதப் போரில் இருந்து தப்பி இங்கிலாந்தின் கிழக்கு லண்டனில் தஞ்சமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய லண்டன் மேயர் சாதிக் கானுக்காகவும், மிக சமீபத்தில் உலகளாவிய காலநிலை அமைப்பின் ராஜதந்திர உறவுகளின் இயக்குநராகவும் உமா குமரன் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, விஞ்ஞானிகள் மற்றும் காலநிலை தலைவர்களுடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள துணிச்சலான காலநிலை நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
வெற்றி வாய்ப்பை இழந்த தமிழ் வேட்பாளர்கள்:
- கிரிஷ்னி ரேஷேகரோன் - சுட்டன் மற்றும் சீம் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், 8 ஆயிரத்து 430 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்
- கவின் ஹரன் - ஈஸ்ட் சவுத் எண்ட் மற்றும் ரோச்ஃபோர்ட் தொகுதியில் பழமைவாத கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், 11 அயிரத்து 368 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்
- நரனீ ருத்ர ராஜன் - ஹேமர்ஸ்மித் மற்றும் சிஸ்விக் தொகுதியில் கிரீன் பார்ட்டி சார்பில் போட்டியிட்ட இவர், நான்காயிரத்து 468 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்
- கமலா குகன் - ஸ்டெலிபிரிட்ஜ் மற்றும் ஹைடைத் தொகுதியில் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், வெறும் ஆயிரத்து 80 வாக்குகளை மட்டுமே பெற்றார்
- மவுரியன் செந்தில் நாதன் - எப்சம் மற்றும் எவெல் தொகுதியில் ரீஃபார்ம் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், 5 ஆயிரத்து 795 வாக்குகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்தார்
- டெவினா பால் - ஹேம்பல் வாலே தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், 8 ஆயிரத்து 753 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.
- ஜாஹிர் ஹுசைன் - மேற்கு க்ராய்டன் தொகுதியில் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு, 3 ஆயிரத்து 667 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார்.