Elon Musk's Grokipedia: எலான் மஸ்க்கா, கொக்கா.! விக்கிபீடியாவிற்கு போட்டியாக களமிறங்கும் ‘க்ரோகிபீடியா‘ - முழு விவரம்
உலகின் மிகப்பெரிய தகவல் தளமான விக்கிபீடியாவிற்கு போட்டியாக, ‘க்ரோகிபீடியா‘ என்ற ஒரு புதிய AI தகவல் தளத்தை அறிமுகப்படுத்த ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

பல காலமாகவே, இணையத்தில் தகவல்களை தேடுவதென்றால், அனைவரும் பயன்படுத்துவது விக்கிபீடியா தான். கிட்டத்தட்ட அதில் இல்லாத தகவல்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கும் இந்த தளத்திற்கு போட்டியாக, ‘க்ரோகிபீடியா‘ என்ற ஒரு புதிய AI தகவல் தளத்தை உருவாக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். அது குறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.
தகவல் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியா
விக்கிபீடியா என்பது, அனைத்து அறிவுத் துறைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. பல பயனர்களால் உருவாக்கப்பட்டு, திருத்தப்படும் ஒரு கூட்டு, பன்மொழி, கட்டற்ற இணைய கலைக்களஞ்சியமாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்களால் இதன் உள்ளடக்கம் கூட்டாக எழுதப்பட்டு, விக்கிமீடியா அறக்கட்டளையால் நிவர்ககிக்கப்பட்டு வருகிறது.
இந்த இணைய பக்க உள்ளடக்கத்தை பயனர்கள் ஊடாடும் வகையில் உருவாக்கலாம், திருத்தலாம் அல்லது மாற்றலாம். மேலும், விக்கிபீடியாவில் உள்ள அனைத்து உள்ளடக்கமும் இலவசமாகவே உள்ளது.
பல்வேறு மொழிகளில் விக்கிபீடியா உள்ளது. உதாரணமாக, தமிழ் விக்கிபீடியா, தமிழ் மொழியில் தகவல்களை வழங்குகிறது. அதோடு, பல இணைப்புகளைக் கொண்ட கட்டுரைகள், வாசகர்களை தாங்கள் தேடும் தகவல்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மேலும் தகவல்களுக்கு வழிநடத்தும்.
எலான் மஸ்க் களமிறக்கும் ‘க்ரோகிபீடியா‘
இந்நிலையில், இந்த விக்கிபீடியாவிற்கு போட்டியாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் களமிறக்கும் புதிய தளத்திற்கு 'க்ரோகிபீடியா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தளமானது, இணையத்தில் உள்ள தகவல்களை 'க்ராக் AI' மூலம் பகுப்பாய்வு செய்து, பயனர்களுக்கு நம்பகமான தகவல்களை உடனடியாக வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த முயற்சிக்கு மக்களின் ஆதரவு தேவை என எலான் மஸ்க் கேட்டுள்ளார்.
அறிவுத் தளமான விக்கிபீடியாவிற்கு xAI-யால் உருவாக்கப்பட்ட போட்டியாளரான க்ரோகிபீடியாவின் ஆரம்ப பீட்டா வெர்ஷன் 2 வாரங்களில் தொடங்கப்படும் என்று எலான் மஸ்க் நேற்று தெரிவித்துள்ளார்.
@amXFreeze என்ற எக்ஸ் பயனரின் பதிவை மஸ்க் மறு ட்வீட் செய்துள்ளார். அதில் க்ரோகிபீடியாவை "மனிதர்களுக்கும் AI-க்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் துல்லியமான அறிவு மூலமாகும், பயன்பாட்டிற்கு வரம்புகள் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
"க்ரோக் விக்கிபீடியா பக்கம் போன்ற ஆதாரங்களைப் பார்த்து, என்ன உண்மை, பகுதியளவு உண்மை, பொய், அல்லது விடுபட்டது?" என்று கேட்கும் அளவுக்கு அனுமானக் கணக்கீட்டைப் பயன்படுத்துகிறது," என்று அந்த ட்வீட் கூறுகிறது. இது விக்கிபீடியா போன்ற ஆதாரங்களை பகுப்பாய்வு செய்யும், பொய்களைக் கொடியிடும், அரை உண்மைகளைச் சரிசெய்து, அதன் உள்ளீடுகளில் விடுபட்ட சூழலைச் சேர்க்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
"இது உண்மையான அறிவு ஆதாரமாக இருப்பதற்கான காரணம், இது உண்மைக்காகவும், உண்மைக்கு வழிசெலுத்துவதற்காகவும் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது... சார்பு அல்லது மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இல்லாமல். எலோன் ஒருபோதும் எதையும் பாதியாகச் செய்வதில்லை, அவர் முழு அளவிற்கும் நேரடியாகச் செயல்படுகிறார்" என்று அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Version 0.1 early beta of Grokipedia will be published in 2 weeks https://t.co/M6VrGv8zp5
— Elon Musk (@elonmusk) October 5, 2025
இந்த குரோகிபீடியா, "விக்கிப்பீடியாவை விட மிகப்பெரிய முன்னேற்றமாக" இருக்கும் என்றும், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கான xAI இன் இலக்கை நோக்கிய ஒரு படியாகவும் இருக்கும் என்றும் எலர்ன் மஸ்க் கூறியுள்ளார்.




















