சபாநாயகராகிறாரா டொனால்ட் ட்ரம்ப்? அமெரிக்க அரசியல் வரலாற்றில் செம்ம ட்விஸ்ட்
வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் நினைத்து பார்க்க முடியாத திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, டொனால்ட் ட்ரம்பை சுற்றி அதிரடி அரசியல் நகர்வுகள் நிகழ்ந்து வருகின்றன.
தவறான காரணங்களுக்காக வரலாற்றில் இடம் பிடித்த ட்ரம்ப்:
வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஒருவருக்கு எதிராக நீதிமன்றம், குற்ற வழக்கை பதிவு செய்தது. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக குற்ற பதிவுக்காக முன்னாள் அதிபரிடம் புகைப்படம் எடுக்கப்பட்டது. இப்படி தவறான காரணங்களுக்காக வரலாற்றில் தடம் பதித்தவர் வேறு யாரும் அல்ல முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான்.
இந்த நிலையில், வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடியரசு கட்சியை சேர்ந்த கெவின் மெக்கார்த்திக்கு எதிராக சொந்த கட்சியை சேர்ந்த தீவிர வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கினர். இந்த சம்பவம், அமெரிக்க அரசியலிலும் குடியரசு கட்சியினர் மத்தியிலும் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசாங்கம், நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இன்னும் 2 வாரங்களுக்கு செலவழிப்பதற்கான பணம் மட்டுமே அமெரிக்க அரசிடம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்க அரசாங்கத்தை ஒற்றுமையுடன் எதிர்க்க குடியரசு கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட சபாநாயகர்:
ஆனால், அதற்கு முன்பு, மெக்கார்த்திக்கு பதிலாக ஒருவரை சபாநாயகராக தேர்வு செய்ய வேண்டும். இதற்கு மத்தியில்தான், மற்றொரு அரசியல் திருப்பம் காத்திருக்கிறது. அது என்னவென்றால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக டொனால்ட் ட்ரம்பை தேர்வு செய்ய குடியரசு கட்சியினர் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
டெக்ஸாஸ் மாகாணத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டிராய் நெல்ஸ், இதுகுறித்து குறிப்பிடுகையில், "சபை மீண்டும் கூடியதும், டிரம்பை சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைப்பதே எனது முதல் அவை நடவடிக்கையாக இருக்கும். எனது வாழ்நாளின் தலைசிறந்த அதிபரான ட்ரம்ப், அமெரிக்காவை முதலிடத்திற்கு கொண்டு சென்று சாதனை படைத்தவர். அவரால் சபைக்கு மீண்டும் பெருமை சேர்க்கப்படும்" என்றார்.
ட்ரம்பை சபாநாயகராக்க வேண்டும் என்ற டிராய் நெல்ஸின் கோரிக்கைக்கு புளோரிடா மாகாண பிரதிநிதிகள் சபை உறுப்பினர் கிரெக் ஸ்டீப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
குடியரசு கட்சியினர் பக்கா ஸ்கெட்ச்:
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், புளோரிடா மாகாண நாடாளுமன்ற உறுப்பினரும் ட்ரம்பின் ஆதரவாளருமான மாட் கேட்ஸ் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகத்தான் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிரிதிநிதிகள் சபையில் குடியரசு கட்சியினர் 11 பேரும் ஜனநாயக கட்சியினர் அனைவரும் சேர்ந்து வாக்களித்து மெக்கார்த்தியை பதவி நீக்கம் செய்தனர்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத போதிலும், ட்ரம்பை சபாநாயகராக்க முடியும். அதற்கு, அமெரிக்க அரசியலமைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 234 ஆண்டுகள் வரலாற்றில், நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதில்லை. தவறான காரணங்களுக்காக வரலாற்றில் இடம்பிடித்துள்ள ட்ரம்ப், இதிலும் வரலாறு படைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.