Joe Biden : செனட் சபையை தக்க வைத்துக்கொண்ட ஜனநாயக கட்சி...கடுப்பான டிரம்ப்...கருத்துகணிப்புகளை துவம்சம் செய்த பைடன்...!
நாடாளுமன்ற இரு அவைகளையும் கைப்பற்றும் நோக்கில் கடும் போட்டி அளித்த குடியரசு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்தியாவை போலவே, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் உள்ளன. அவை, செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படுகிறது. அதற்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். அதிபரின் 4 ஆண்டு பதவிக்காலத்தின் நடுவே இந்த தேர்தல் நடத்தப்படுவதால் இடைக்கால தேர்தல்கள் என்று அழைக்கப்படுகிறது.
இந்தாண்டு நடத்தப்பட்ட தேர்தலில் செனட் சபையை ஜனநாயக கட்சி தக்க வைத்து கொண்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளையும் கைப்பற்றும் நோக்கில் கடும் போட்டி அளித்த குடியரசு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடனின் திட்டங்களை முடக்க நினைத்த குடியரசு கட்யின் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், பிரிதிநிதிகள் சபையில் யார் ஆதிக்கம் நிலைக்கும் என்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. சிறிய அளவிலான பெரும்பான்மையின் மட்டும் குடியரசு கட்சி முன்னிலையில் உள்ளது.
செனட் சபையை பொறுத்தவரை, அதை தக்க வைப்பதற்கான 50 இடங்கள், செனட் உறுப்பினர் கேத்தரின் கோர்டெஸ், நெவாடாவில் வெற்றிபெற்றதன் மூலம் ஜனநாயக கட்சிக்கு கிடைத்தது. கேத்தரினின் வெற்றி, ஜனநாயக கட்சியை மேலும் பலப்படுத்தியுள்ளது.
பொருளாதார ரீதியாக சவால்களை சந்தித்து வரும் நெவாடாவில் நாட்டிலேயே அதிகபட்ச விலையில் எண்ணெய் விற்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், அதே இடத்தில் மீண்டும் வெற்றி பெற கேத்தரின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவர் மிகவும் பலவீனமான வேட்பாளராக கருதப்பட்டார். இதன் காரணமாக, அவரின் வெற்றி குடியரசு கட்சியினரை விரக்தியின் உச்ச கட்டத்திற்கே தள்ளியுள்ளது.
ஒரு மாகாணத்திற்கு இரண்டு செனட்டர்கள் என்ற அடிப்படையில், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் 48 உறுப்பினர்கள் ஜனநாயக கட்சிக்கும் 48 உறுப்பினர்கள் குடியரசு கட்சிக்கும் உள்ளனர். மற்ற கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். சட்டங்களை நிறைவேற்ற 51 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இரண்டு கட்சிகளுக்கும் 50 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாக்குளித்து ஜனநாயக கட்சியை வெற்றி பெற வைக்கலாம்.
ஜார்ஜியா செனட் சபை உறுப்பினர் பதவிக்காக இரண்டு கட்சிகளும் போராடி வருகின்றன. நடைபெற்ற தேர்தலில், பெரும்பான்மை கிடைக்காததால், வரும் டிசம்பர் 6ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. செனட் சபையை ஜனநாயக கட்சி தக்க வைத்திருப்பதன் மூலம் அமைச்சரவை மற்றும் நீதித்துறை நியமனங்களை ஜனநாயக கட்சியால் எளிதாக மேற்கொள்ள முடியும்.
அதேபோல, பைடன் அரசை மேற்பார்வையிடும் பல்வேறு கமிட்டிகளின் மீது ஜனநாயக கட்சியால் அதிகாரம் செலுத்த முடியும். விசாரணை நடத்த முடியும். அதேபோல, பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி வெற்றி பெற்று சட்டங்களை அனுப்பும் பட்சத்தில், ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையால் அதை நிராகரிக்க முடியும்.