அமெரிக்க ராணுவம் தொடர்பாக ரகசிய தகவல்கள்...சீன பலூன் பயன்படுத்தப்பட்டது இதற்காகதானா...பகீர் தகவல்கள்..!
பலூன் தொடர்பாக பல்வேறு விதமான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில், சீனாவின் உளவு பலூன் என சொல்லப்பட்ட ஒன்று அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே பறந்தது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் சீனாவிற்கு செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த சர்ச்சை வெடித்தது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சீன உளவு பலூன்:
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முழு விளக்கமும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையின் பேரில், உடனடியாக அந்த பலூனை சுட்டு வீழ்த்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
ஆனால், அந்த பலூனை சுட்டு வீழ்த்தினால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பெண்டகன் (அமெரிக்க பாதுகாப்புத்துறை) எச்சரித்தது. இதன் காரணமாக, அந்த பலூனை சுட்டு வீழ்த்துவதில் குழப்பம் நீடித்தது. இருப்பினும், அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதிர்ந்து போன உலக நாடுகள்:
பலூன் தொடர்பாக பல்வேறு விதமான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பலூன்கள் மூலமாக அமெரிக்காவின் ராணுவ தளங்களில் இருந்து உளவு தகவல்கள் சேகரிக்கப்பட்டு சீனாவுக்கு அதே நேரத்தில் அனுப்பப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
உளவு தகவல்கள் பகிர்வதை தடுக்க அமெரிக்க அரசு முயற்சி செய்தபோதிலும் அந்த தகவல்களை சீனாவிற்கு அனுப்பபட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பாக பல்வேறு ராணுவ தளங்களின் மேலே பலூன் பறந்ததாக அமெரிக்க ராணுவத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
சேகரித்த உடனேயே ராணுவ தகவல்கள் சீனாவிற்கு அனுப்பப்பட்டதாக மூன்று ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என என்பிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா சேகரித்த உளவு தகவல்கள் பெரும்பாலும் மின்னணு சிக்னல்களில் இருந்து எடுக்கப்பட்டது.
ஆயுத அமைப்புகளில் இருந்தோ, ராணுவ அதிகாரிகளிடம் இருந்தோ, இந்த தகவல்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என செய்தி வெளியாகியுள்ளது. அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இந்த செய்தி தொடர்பாக, அமெரிக்க அதிகாரிகளும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
சமீபத்திய ஆண்டுகளாகவே, ஹவாய், புளோரிடா, டெக்சாஸ் மற்றும் குவாம் ஆகிய இடங்களிலுக்கு மேலே குறைந்தது நான்கு பலூன்கள் காணப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பலூன் தொடர்பாக தி வாஷிங்டன் போஸ்ட்டில் செய்தி வெளியாகியிருந்தது. அதில், "சீனாவின் தெற்குக் கடற்கரையில் உள்ள ஹைனான் மாகாணத்திற்கு வெளியே பல ஆண்டுகளாக இயங்கி வரும் கண்காணிப்பு பலூன், ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இராணுவச் சொத்துக்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.