Xi Jinping assures assistance to India | இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் - சீன அதிபர் ஷி ஜின்பிங்..
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுடன் சீனா துணை நிற்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது தீவிரம் அடைந்துவருகிறது. இதனால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் இந்தியாவில் தீவிரமாகி வருகிறது. இதற்கு இந்தியா உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வருகிறது. அத்துடன் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவுடன் சீனா துணை நிற்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் தெரிவித்திருக்கும் செய்தியில், “இந்தியாவின் தற்போதைய நிலை மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு சீனா துணை நிற்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை செய்ய சீனா தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தற்போதுதான் முதல் முறையாக இரு நாட்டு தலைவர்கள் முதல் முறையாக கொரோனா குறித்து பேசியுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற எல்லைப் பிரச்னைக்கு பிறகு இரு நாட்டு தலைவர்கள் பேசுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியிருந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு சீனா துணை நிற்கும் என்று அவரும் கூறியிருந்தார். தற்போது அதை சீன அதிபரும் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.