மூன்றாவது குழந்தை பெற்றால் ரூ.57 ஆயிரம் பரிசு... வீடு கட்ட மானியம்... அசர வைத்த அரசு உத்தரவு!
மூன்றாவது குழந்தை பெற்று கொள்ளும் தம்பதிகளுக்கு ஊக்க தொகையுடன் கூடிய பல அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வருகிறது. தற்போது அந்த நாட்டின் மக்கள் தொகை 1.41 பில்லியன் என்ற கணக்கில் உள்ளது. சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற மக்கள் கணக்கெடுப்பின்படி கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே அந்த நாட்டில் மக்கள் தொகை அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2025ஆம் ஆண்டே சீனாவின் தற்போதைய மக்கள் தொகையை இந்தியா தாண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும் சீனாவில் வயதனாவர்களின் எண்ணிக்கை இளைஞர்களைவிட விரைவில் அதிகாமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே அந்நாட்டு அரசு தம்பதிகள் அனைவரும் மூன்றாவது குழந்தை பெற்று கொள்ளலாம் என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் சீனாவின் பல்வேறு நகரங்களில் இருக்கும் செலவுகள் காரணமாக பல தம்பதிகள் இரண்டு குழந்தைகளை வைத்து வாழவே கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் அவர்கள் மூன்றாவது குழந்தை பெற்று கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கருதப்படுகிறது. ஆகவே அவர்களுக்கு நல்ல பரிசு அளிக்க சீனாவின் பல்வேறு மாகாணங்கள் திட்டமிட்டுள்ளன.
அதன்படி கான்சே மாகாணத்தில் உள்ள லின்ஸ் கவுண்டி நகரத்தில் தற்போது உள்ள தம்பதிகள் மூன்றாவது குழந்தைகள் பெற்று கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது அந்தப் பகுதியில் வாழும் தம்பதிகள் மூன்றாவது குழந்தையை பெற்று கொள்ளும் போது அவர்களுக்கு 777 அமெரிக்க டாலர் உதவி தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இது 57 ஆயிரம் ரூபாயாக உள்ளது. மேலும் அந்த குழந்தை மூன்று வயது முடிந்த உடன் மேலும் 1000 யுவான் பரிசாக அந்த குடும்பத்திற்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மூன்று குழந்தைகள் உள்ள குடும்பம் அந்தப் பகுதியில் வீடு வாங்க 30,000 யுவான் மானியமாக தருவதாகவும் அந்த நகரத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லின்ஸ் கவுண்டி நகரத்தில் தற்போது உள்ள மக்கள் தொகை 22 ஆயிரமாக குறைந்துள்ளது. எனவே அந்த நகரத்தில் மக்களை தொகையை 2030ஆம் ஆண்டிற்குள் 9 சதவிகிதம் அதிகரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கடந்த 1979ஆம் ஆண்டு முதல் தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த கொள்கையை 2016ஆம் ஆண்டு சீன அரசு இரண்டு குழந்தை என்று மாற்றியது. எனினும் அப்போதும் அங்கு குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இந்தச் சூழலில் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்து மூன்றாவது குழந்தை பெற்று கொள்ள இந்தாண்டு சீன அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 'கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட...' - நாயை கொஞ்சும் குழந்தை -வைரல் வீடியோ !