China India Russia: புது கூட்டு, புது ரூட்டு; சீனா SCO மாநாட்டில் மோடி, புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணைவார்களா.?!
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், மோடி மற்றும் புதின் பங்கேற்பதை சீனா உறுதி செய்துள்ளது. இதனால், அமெரிக்காவிற்கு எதிராக எல்லோரும் ஒன்றிணைவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலக நாடுகளின் 20 தலைவர்கள் பங்கேற்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியா-சீனா-ரஷ்யா இணைந்து, அமெரிக்காவிற்கு எதிராக ஒரு கூட்டணியை அமைக்கிறதா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு
சீனாவின் தியான்ஜின் நகரில் வரும் 31-ம் தேதி, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்குகிறது. ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாக, இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த கூட்டமைப்பின் மாநாடு தான், வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில், இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட, உலக நாடுகளைச் சேர்ந்த 20 தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று சீனா அறிவித்துள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், மோடி, புதின் தவிர, துருக்கி அதிபர் எர்டோகன், இந்தோனேசிய அதிபர் பிரபொவா சுமியண்டோ, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், வியட்நாம் பிரதமர் பஹம் மின் ஷினா, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா, சீனாவை வாட்டி வரும் அமெரிக்கா
இந்தியாவும், சீனாவும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கோபத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் தாறுமாறாக வரிகளை விதித்து வாட்டி வருகிறார். இவ்விரு நாடுகளும் ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்வது, உக்ரைன் மீதான போருக்கு மறைமுகமாக உதவுவது போன்றது என்று ட்ரம்ப் குற்றம்சாட்டி, இறக்குமதி வரிகளை பல மடங்கு அதிகரித்துள்ளார்.
இதனால், சர்வதேச வர்த்தகப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பிற்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டம் தெரிவித்துள்ளன. அதோடு, 3 நாடுகளும் தங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வேலைகளை செய்து வருகின்றன.
அமெரிக்காவிற்கு எதிரான இணைவார்களா.?
இப்படிப்பட்ட சூழலில் தான், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முக்கியமாக அமெரிக்காவின் வரி விதிப்பு பிரச்னைக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்புள்ளது.
அப்படி நடக்கும் ஆலோசனையில், அமெரிக்காவிற்கு எதிராக, இந்தியா-சீனா-ரஷ்யா கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பர்ப்பு தற்போது எழுந்துள்ளது. அதற்கு ஏற்றார்போல், மோடி மற்றும் புதினின் வருகையை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த 3 பெரிய நாடுகளும் புதிய கூட்டணி அமைந்து, புதிய ரூட்டை எடுத்து, அமெரிக்காவிற்கு தக்க பாடம் புகட்டுமா.? பொறுத்திருந்து பார்ப்போம்.





















