அங்கு என்னதான் நடந்தது? பள்ளி இருந்த இடத்தை தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. கனடாவில் அதிர்ச்சி!
கனடா நாட்டில் முன்பு பள்ளி இருந்த இடத்தில் தற்போது தோண்ட தோண்ட குழந்தைகளின் சடலங்கள் கிடைத்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![அங்கு என்னதான் நடந்தது? பள்ளி இருந்த இடத்தை தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. கனடாவில் அதிர்ச்சி! Bodies of 215 children found buried in Kamloops Indian Residential School அங்கு என்னதான் நடந்தது? பள்ளி இருந்த இடத்தை தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. கனடாவில் அதிர்ச்சி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/fc762e4bcc9aee2c630405a617967543_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கனடா நாட்டில் பழங்குடி மக்களுக்காக கட்டப்பட்ட Kamloops Indian Residential School என்ற பள்ளியின் வளாகத்தில் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் ரேடார் கருவிகளை கொண்டு தொடர்ந்து அந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.
கனடாவில் பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள வான்கூவர் என்ற நகரத்தில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளி. 19 மற்றும் 20ம் நூற்றாண்டில் பல பழங்குடி குழந்தைகள் இந்த பள்ளியில் பயின்றுள்ளனர். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின்படி இந்த பள்ளியில் பயிலச்சென்ற பல குழந்தைகள் திரும்பி வரவில்லை என்றும், மேலும் சுமார் 4100 குழந்தைகள் இந்த பள்ளியில் இறந்திருக்கக்கூடும் என்றும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.
உலக அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு செல்வது பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. ஆனால் அப்படி குடியேறும் மக்கள் அங்கு ஏற்கனவே குடியிருக்கும் பூர்வகுடி மக்கள் தங்களோடு இணைந்து வசிப்பதை பெரிய அளவில் விரும்பவில்லை. பிற்காலத்தில் தொழில், வேலை, நிலம் என்று பல விஷயங்களில் நமக்கு போட்டியாக இந்த பழங்குடி மக்கள் வந்துவிடுவார்களோ என்று மக்கள் எண்ணியதுண்டு. கனடா நாட்டில் நடந்துள்ள இந்த சம்பவமும் இதன் அடிப்படையில் தான் நடந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
ஐரோப்பியர்கள் தற்போதைய பிரிட்டீஷ் கொலம்பியா பகுதியில் பழங்குடி மக்களுக்காக கட்டியது தான் அந்த பள்ளி. Kamloops Indian Residential School என்ற அந்த பள்ளி 1800களின் இறுதியாக சரியாக சொல்லப்போனால் 1890ம் ஆண்டு பழங்குடி மக்களின் குழந்தைகளுக்காக கட்டப்பட்டுள்ளது. 1960களின் இறுதிவரை இந்த பள்ளி நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அதன் பிறகு அரசே பள்ளியை ஏற்று நடத்த முன்வந்த நிலையில் 1978ம் ஆண்டு அந்த பள்ளி மூடப்பட்டது.
இந்த பள்ளியில் அங்கேயே தங்கி படிக்க விடுதி வசதி இருந்த காரணத்தால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அங்கு தங்கி படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி பல குழந்தைகள் அந்த பள்ளியில் இருந்து மாயமாகியுள்ளனர், பெற்றோர்கள் புகார் அளித்தபோதும் குழந்தைகள் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது ஆண்டுகள் பல கடந்து அந்த பள்ளியின் வளாகத்தில் தான் 200க்கும் அதிகமான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த நிகழ்வு குறித்து அந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)