Top 10 Dams: பிரம்மிக்க வைக்கும் கட்டுமானம்.. உலகின் டாப் 10 அணைகள்
பூமியின் சுழற்சி வேகத்தை குறைத்த சீனாவின் த்ரி கோர்சஸ் அணையில் தொடங்கி கேரளாவில் உள்ள இடுக்கி அணை வரை உலகின் டாப் 10 அணைகள் குறித்த பட்டியல்
1.மாண்டிசிலோ அணை- அமெரிக்கா
உலகின் மிக அழகான அணைகளில் ஒன்றான மண்டிசிலோ அணை புட்டாகிர்க் எனப்படும் சேக்ரமண்டா நதி நீர்த்தேக்கத்திற்காக கட்டப்பட்டது. இந்த அணை 1953 ஆம் ஆண்டில் கட்டத்தொடங்கப்பட்டு 1957 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 304 அடி உயரமும், 1023 அடி நீளமும் கொண்ட இந்த அணையின் அகலம் மட்டும் 100 அடியில் கட்டப்பட்டுள்ளது. ஒரு விநாடிக்கு 48ஆயிரத்து 400 க்யூபிக் அடி நீரை ஒரே நேரத்தில் வெளியேற்றும் திறன் கொண்ட இந்த அணையில் இருந்து நீர் மின்சாரம் உற்பத்தியும் நடைபெறுகிறது. இந்த அணையின் அருகே உள்ள நீர்குழி மரண குழி என்று அழைக்கப்படுகுறது. நீர் வெளியேற்றம் இதன் வழியாகவும் நடைபெறுகிறது.
2.மோசூல் அணை- ஈராக்
371அடி உயரமும் 3 கிலோ மீட்டர் நீளமும் 33 அடி அகலமும் கொண்ட இந்த அணை மண் மற்றும் கல்லைக் கொண்டு கட்டப்பட்ட பலவீனமான அணையாக உள்ளது. இந்த அணைப்பகுதி அதிகப்படியான மண் அரிப்பால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்னையை சீர் செய்ய இந்த அணைக்கு அருகில் அவசரத் தேவைகளுக்காக மேலும் சில அணைகள் கட்டுப்பட்டுள்ளன. இருப்பினும் இதன்மீதான அச்சம் இன்னும் குறையாத ஒன்றாகவே உள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த அணைக்கு தீவிரவாத அச்சுறுத்தலும் இருக்கவே செய்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த அணையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
3.கரிபா அணை- ஜிம்பாவே
சம்பேசி ஆற்றை கட்டுப்படுத்துவதற்காக 1955ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கிய கரிபா அணை 1959ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 420 அடி உயரமும் 1900 அடி நீளமும் கொண்ட இந்த அணை 250 மீட்டர் சுற்றளவு கொண்டது. 185 கியூபிக் கிலோ மீட்டர் நீர் கொள்ளவை கொண்ட இந்த அணை உடைந்தால் அருகில் உள்ள 35 லட்சம் மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.
4.கார்டன் அணை- ஆஸ்திரேலியா
கார்டன் நதியை கட்டுப்படுத்த 1974ஆம் ஆண்டில் கட்டத்தொடங்கி 1978ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையானது, 459அடி உயரமும் 650 அடி நீளமும் 58 அடி அகலமும் கொண்டது. 12 கோடியே 3 லட்சத்து 59 ஆயிரம் கியூபிக் கொள்ளளவு நீரை தேக்கும் வகையில் இந்த அணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
5.இடுக்கி அணை, இந்தியா
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் கிராணைட் மலைகளான குறவன், குறத்தி மலைகளுக்கு இடையே செல்லும் பெரியாறு ஆற்றின் குறுக்கே இந்த இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. 1969ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கி 1973ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த இடுக்கி அணை மிகப்பெரிய இரட்டை வளைவு அணையாக உள்ளது. 554 அடி உயரமும், 365 அடி நீளமும் 65 அடி அகலமும் கொண்டுள்ள இந்த அணையில் ஷட்டர்கள் ஏதும் கிடையாது, அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை அருகே உள்ள செருதோணி அணையில் இருந்து திறக்கப்படுகிறது. 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் இந்த அணை மிக முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
6.திரி கோர்சஸ் அணை-சீனா
உலகின் மிகப்பெரிய அளவில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணையாக திரி கோரிசஸ் அணை வடிவமைக்கப்பட்டுள்ளது. யாங்ஜி ஆற்றிற்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்ததாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1994 ஆம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்டு 2003ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் உயரம் 594 அடியாக உள்ளது. 7661 அடி நீளமும் 371 அடி அகலமும் கொண்ட இந்த அணையில் இருந்து 95 டெராவாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு மட்டு 112 டெராவாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டில் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 87ஆயிரம் பேர் உயிரிழந்திருந்தனர். இந்த அணையின் கட்டுமானமே நிலநடுக்கத்திற்கு காரணம் என உலகநாடுகளை சேர்ந்த பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த அணை இயற்கைக்கு மாறான கட்டுமானத்தை கொண்டுள்ளதாக தொடர்ந்து உலகநாடுகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
7.அல்மேந்திரா அணை- ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டில் மிகப்பெரிய அணையான 1963ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டு 1970ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த அணையின் உயரம் 663 அடியாகும். டாரன்ஸ் நதிக்கு குறுக்கே 1860 அடி நீளத்தில் 5 கிலோ மீட்டர் சுற்றளவைக் கொண்ட இந்த அணையில் 2.5 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீரை தேக்கிவைக்கும் திறன் கொண்டதாக உள்ளது.
8.பகுன் அணை- மலேசியா
சராவாக்கில் உள்ள பலூயி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பகுன் அணையின் கட்டுமானம் 1996ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2011ஆம் ஆண்டில்தான் முடிக்கப்பட்டது. உலகின் இரண்டாவது கான்கீரீட் பேஸ்டு ராக்கில் அணையான இதன் உயரம் 673அடியும் நீளம் 2361 அடியும் கொண்டது. தெற்காசியாவிலேயே அதிகளவிலான நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்ட அணைகளில் ஒன்றாக விளங்கும் இந்த அணை 140கிலோ மீட்டர் தூரத்தில் 65 சதுர கிலோ மீட்டர் தூரத்தில் நீரை தேக்கிவைக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 43.8 பில்லியன் கியூபிக் மீட்டர் நீரை தற்போது தேக்கி வைத்திருக்கும் நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டில் இந்த அணையை திறக்கும்போது அதிக அளவில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தியதுடன் இந்த அணையால் ஏற்பட்ட சுற்றுசூழல் பாதிப்பு இன்னும் சரிசெய்ய முடியாத ஒன்றாகவே உள்ளது.
9.ஹோவர் அணை- அமெரிக்கா
நெவேடா- அரிசோனா மாகாண எல்லைகளில் பொலரோடோ ஆற்றின் குறுக்கே 1936ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 726 அடி உயரமும் 1244 அடி நீளமும் 660 அடி அகலமும் கொண்ட இந்த அணையை சிக்ஸ் கம்பெனி என்ற நிறுவனம் கட்டியது. இந்த அணை பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெர்மினேட்டர் டார்க் ஃபேக் ஹாலிவுட் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் இந்த அணையில்தான் படமாக்கப்பட்டது.
10.ஜின்பிங் ஒன் அணை- சீனா
இந்த அணை ஜிங்பிங் ஒன் ஹைட்ரோ பவர் ஸ்டேஷன் என்றும் அழைக்கப்படுகிறது. யால்லாங் அணைக்கு குறுக்கே 2005 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு 2013ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. சீனா இந்த அணையை கட்டிதன் முக்கிய நோக்கம் அதிகளவிலான நீர் மின்சாரம் உற்பத்தி செய்யவும், மகசூலை பெருக்கவுமே கட்டப்பட்டாலும், ஆனால் இந்த அணை பூமியில் தவறான பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக கூறும் சில ஆராய்ச்சியாளர்கள் இதனை பூமியின் டைம் பாம் என்றும் அழைக்கின்றனர். இந்த அணை உடைந்தால் ஏராளமான மக்கள் உயிரிழக்க நேரிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்