School Gun Shot: அச்சச்சோ..! பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 4 மாணவர்கள் உயிரிழப்பு, 14 வயது சிறுவன் கைது
School Gun Shot: அமெரிக்காவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
School Gun Shot: அமெரிக்காவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடடு தொடர்பாக, 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு:
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து காவல்துறை மற்றும் மருத்துவர்கள் பள்ளி பகுதிக்கு விரைந்தனர். சுற்றுவட்டார பகுதிகள் கடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியதாக, சந்தேகத்தின் அடிப்படையில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். சிலர் காயமடைந்துள்ளதாகவும், குறைந்தபட்சம் ஒருவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
#HappeningNow shooting at Apalachee High School in Barrow Co. GA. Hearing reports of injuries. pic.twitter.com/t4xgv8Ibaq
— DAP (insert blue check here) (@Deetroit_Dave) September 4, 2024
நடந்தது என்ன?
மாநிலத் தலைநகரான அட்லாண்டாவிலிருந்து வடகிழக்கே சுமார் 45 மைல் (70 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள விண்டர் நகரில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. அங்கு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பேசிய மாணவர் செர்ஜியோ கால்டெரா, ”தான் வேதியியல் வகுப்பில் இருந்தபோது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. எங்களது ஆசிரியர் கதவைத் திறந்தார், மற்றொரு ஆசிரியர் ஓடி வந்து கதவை மூடச் சொன்னார். அங்கு ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் கூறினார். மாணவர்களும் ஆசிரியர்களும் அறையில் பதுங்கியிருந்தபோது, யாரோ ஒருவர் எங்களது வகுப்பறை கதவைத் தட்டியதோடு, அதைத் திறக்கும்படி பல முறை கத்தினார். தட்டுவதை நிறுத்தியதும், துப்பாக்கிச் சூடு மற்றும் அலறல் சத்தம் கேட்டது. பின்னர் தனது வகுப்பினர் பள்ளியின் கால்பந்து மைதானத்திற்கு சென்று பதுங்கினோம்” என தெரிவித்தார். சுமார் 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த நிலையில், 10.20-க்கு எல்லாம் காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவன், அந்த பள்ளியை சேர்ந்தவனா என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்:
கடந்த இரண்டு தசாப்தங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குள் நூற்றுக்கணக்கான துப்பாக்கிச் சூடுகளை அமெரிக்கா கண்டுள்ளது. 2007 இல் வர்ஜீனியா டெக்கில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த படுகொலை அமெரிக்க துப்பாக்கிச் சட்டங்கள் மற்றும் அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தம் பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. இது "ஆயுதங்களை வைத்திருப்பதற்கும் தாங்குவதற்கும்" உரிமையை உள்ளடக்கியது.