ஈக்வடார் சிம்போரோசாவில் நிலச்சரிவு - 16 பேர் உயிரிழப்பு..
ஈக்வடாரில் உள்ள சிம்போரோசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
ஈக்வடார் பகுதியில் பெய்து வந்த கன மழை காரணமாக சிம்போரோசா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஈக்வடாரில் பேரிடர் மேலாண்மை கூற்றுப்படி 16 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
ஈக்வடார் சிம்போரோசா பகுதியில் உள்ள அலவுசியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஏரளாமான வீடுகள், கட்டடங்கள் மண்ணில் சரிந்து விழுந்தது. இதில் பலரும் சிக்கினர். பேரிடர் மேலாண்மை அளித்த முதற்கட்ட தகவலின்படி 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 16 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின் பேரிடர் மேலாண்மை அதன் அறிக்கையை மாற்றி 7 பேர் உயிரிழந்ததாகவும், 43 பேர் காயமடைந்ததாகவும், 32 பேர் மீட்க்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
Debido a los deslizamientos de tierra en Alausí he dispuesto la activación inmediata de @Riesgos_Ec y de todas las carteras del Estado. En estos momentos se están movilizando equipos de bomberos de Guamote, Chunchi, Riobamba y Cuenca para la atención a ciudadanos afectados.
— Guillermo Lasso (@LassoGuillermo) March 27, 2023
போக்குவரத்து துறை அமைச்சர் டாரியோ ஹெர்ரேரா இந்த நிலச்சரிவு பற்றி கூறுகையில் ” தற்போது ஏற்பட்டுள்ளது மிகவும் மோசமான நிலச்சரிவாகும். நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்ப்பதே பிரதானமான பணி” என கூறினார். ஜனாதிபதி கில்லர்மோ லாசோ இந்த மாத தொடக்கத்தில் 14 மாகாணங்களில் மோசமான வானிலை மாற்றத்தால் அவசர நிலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவு குறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில், பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
ஈக்வாடரில் கன மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை 6,900 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 72 வீடுகள் மண்ணில் புதைந்து போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டியன் மாகாணத்தில் கடும் மழை காரணமாக இந்த ஆண்டு தொடகத்திலிருந்து இதுவரை 22 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், எல் ஓரோ மற்றும் அசுவே மாகாணங்களில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தனர், மேலும் 126 பேர் காயமடைந்தனர். அதேபோல் பிப்ரவரி 2022 இல், கனமழை காரணமாக குய்டோவில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சுமார் 24 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து ஈக்வாடரில் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதால் அந்நாட்டு அரசாங்கத்திற்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.