AstraZeneca: அடுத்தடுத்து வந்த சிக்கல் - உலகம் முழுவதும் கோவிஷீல்ட் தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனிகா
AstraZeneca: கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, பக்கவிளவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அண்மையில் தெரிவித்து இருந்தது.
AstraZeneca: அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் உலகம் முழுவதும் தனது, கோவிஷீல்ட் தடுப்பூசிகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனிகா:
கொரோனா பரவலை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசிக்கான தேவை தற்போது சந்தையில் குறைந்துள்ளதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.கொரோனா திரிபுகளை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு விதமான மருந்துகள் தயாரிக்கப்பட்டதால், தற்போது மருந்துகள் சந்தையில் தேங்க தொடங்கியுள்ளன. எனவே இனி புதியதாக மருந்துகள் உற்பத்தி செய்யப்படாது மற்றும் விநியோகமும் செய்யப்படாது. ஐரோப்பாவிற்குள் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான் சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை திரும்பப் பெறுகிறோம்” அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டால் பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம்:
கோவிஷீல்ட் தடுப்பு மருந்தால் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) எனப்படும் இரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் கடந்த வாரம் ஒப்புக்கொண்டது. இது அந்த தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்ட, பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையிலும், முக்கிய பேசுபொருளானது. இந்த சூழலில் தான் தனது கொரோனா தடுப்பு மருந்துகளை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குகள்:
அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் கொரொனா தடுப்பு மருந்து பல உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக, உலகின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. ஜேமி ஸ்காட் என அடையாளம் காணப்பட்ட ஒரு நபர், ”தடுப்பூசியை செலுத்திய பிறகு "இரத்த உறைவு மற்றும் மூளையில் இரத்தப்போக்கு ஏற்பட்டது, இதனால் தனக்கு கடுமையான மூளைக் குறைபாடு ஏற்பட்டது" என்று குற்றம்சாட்டியுள்ளார். கூடுதலாக, அஸ்ட்ராஜெனிகாவுக்கு எதிராக அதன் தடுப்பூசி விளைவுகள் தொடர்பாக , 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் வழக்குகள்:
கோவிஷீல்ட் அஸ்ட்ராஜெனெகாவால் உருவாக்கப்பட்டது மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை தான் போட்டுக்கொண்டனர். இந்நிலையில், அந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது. விசாரணை தேதி இன்னும் நிர்ணயிக்கப்படாத நிலையில், தடுப்பூசியின் பக்கவிளைவுகளை விசாரிக்க நிபுணர் குழுவைக் கோரும் மனுவை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஒப்புக்கொண்டார்.