இதெல்லாம் கலையா? ஒரு வாழைப்பழம் ரூ.95 லட்சமா? சட்ட சிக்கலில் மாட்டிய கலைஞர்!!
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அப்படிப்பட்ட கலையை உருவாக்கிய நபர் மீது சட்டப்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கலைப்பொருட்களுக்கு தனி மதிப்பு இருப்பது அனைவரும் அறிந்ததே! பல லட்ச கோடி ரூபாய் மதிப்பில் ஓவியங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்களை விலைக்கு வாங்குபவர்களை பற்றி நாம் கேட்டிருப்போம். அப்படிதான், யுனைடெட் ஸ்டேட்ஸ் மியாமி நகரில் நடந்த கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு வாழைப்பழம் இந்திய மதிப்பில் 95 லட்சம் ரூபாய் வரை விற்பனையான செய்தி அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தது நினைவிருக்கும். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அப்படிப்பட்ட கலையை உருவாக்கிய நபர் மீது சட்டப்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வித்தியாசமான கலைப்பொருள்:
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் மௌரிஷியோ காட்லன் (Maurizio Cattelan). இவர் வித்தியாசமான முறையில் கலைபாடுகளை உருவாக்குவதில் ஆர்வம் மிகுந்தவர். திறன் மிக்கவர்; இவருக்கு உலக அளவில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவர் என்ன செய்தாலும் அது டிரெண்டாகும். "அமெரிக்க 18 காரட் தங்க டாய்லெட் " என்ற ஒன்றை உருவாக்கியதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தத எனலாம். அப்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு ஒரு சாதாரண வாழைப்பழத்தை தன் படைப்புக்கு பயன்படுத்திய மௌரிஷியோ அதை வித்தியாசமான கலை என்று கூறி கண்காட்சி நடைபெற்ற இடத்தில் உள்ள சுவரில் வாழைப்பழத்தை டேப் மூலம் ஒட்டி வைத்துவிட்டார். என்னாடா இது? எங்கே கலை என்று கேட்கிறீர்களா? ஆம், இதுதான் கலை என்பது அவரின் பதில்.