(Source: ECI/ABP News/ABP Majha)
ஒட்டுமொத்தமாக விற்பனைக்கு வந்த கிராமம்: விலையும் கம்மிதான்.. ஷாக் ரியாக்ஷன் கொடுத்த நெட்டிசன்ஸ்
ஸ்பெயினை சேர்ந்த ஒரு ஒட்டுமொத்த கிராமமும் ரூ.2.1 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது மாபெரும் கனவாக உள்ளது. நம்மூரில் உள்ள விலைவாசிக்கு ஒரு சிறிய வீடு வாங்க வேண்டும் என்றாலே, ஒருவர் பல ஆண்டுகளுக்கு கடனாளியாக மாற வேண்டி உள்ளது. ஆனால், சென்னையில் ஒரு சொகுசு வீடு வாங்கும் அளவிலான காசிற்கு, ஸ்பெயினில் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு முழு கிராமமே விற்பனைக்கு வந்துள்ளது.
COURTESY: indiatimes
கிராமாமே விற்பனைக்கு என்ற அதன் உரிமையாளரின் அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. போர்ச்சுகல் எல்லையில் உள்ள ஜமோரா மாகாணத்தில் அமைந்து இருக்கும், சால்டோ டி காஸ்ட்ரோ எனும் கிராமம் தான் இந்திய மதிப்பில் ரூ.2.1 கோடி எனும் விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்தில் மூன்று மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், 44 வீடுகள், ஒரு விடுதி, ஒரு தேவாலயம், ஒரு பள்ளி, ஒரு நீச்சல் குளம் மற்றும் ஒரு பழமையான கட்டடமும் அடங்கியுள்ளன. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1950 களின் முற்பகுதியில் சால்டோ டி காஸ்ட்ரோ பகுதியில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத்தின், கட்டுமான பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்காக அந்த கிராமம் உருவாக்கப்பட்டது. ஆனால், 1980-களின் பிற்பகுதியில் அந்த கிராமம் முழுமையாக கைவிடப்பட்டது. அதஒதொடர்ந்து பொதுமக்கள் யாரும் அங்கு வசிக்காத நிலையில், சால்டோ டி காஸ்ட்ரோ கிராமத்தை 2000-வது ஆண்டுகளின் தொடக்கத்தில் தனிநபர் ஒருவர் விலைக்கு வாங்கினார். சொகுசு விடுதி ஒன்றை கட்டி அப்பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் எனும் அவரது நோக்கம் பல்வேறு காரணங்களால் தடைபட்டது. இந்நிலையில், 80 வயதை தாண்டிய அந்த உரிமையாளர் சால்டோ டி காஸ்ட்ரோ கிராமத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். தன்னால் அந்த கிராமத்தை இனி பராமரிக்க முடியாது எனவும், அதனை சுற்றுலாத்தலமாக மாற்றும் எண்ணம் கொண்டவர்கள் வாங்க முன்வரலாம் எனவும் அறிவித்துள்ளார்.
COURTESY: indiatimes
அறிவிப்பு வெளியான ஒருவார காலத்திற்குள், சால்டோ டி காஸ்ட்ரோ கிராமத்தை விலைக்கு வாங்குவதற்கான விவரங்களை விசாரித்துள்ளனர். ரஷியா, பிரான்சு, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 300 பேர், கிராமத்தை விலைக்கு வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாகவும், ஒருவர் முன்பணம் வழங்கியுள்ளதாகவும், சால்டோ டி காஸ்ட்ரோ கிராமத்தை விற்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த கிராமத்தின் விலை இந்திய மதிப்பில், ரூ.54 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நகர்ப்புறங்களில் இருந்து வெகுதொலைவில் இருந்தது, பல கட்டடங்கள் சேதமடைந்தது இருப்பது போன்ற காரணங்களால் கிராமத்தை விலைக்கு வாங்க யாரும் முன்வரவில்லை.
இதையடுத்து, சால்டோ டி காஸ்ட்ரோ கிராமத்தின் விலை தற்போது ரூ.2.1 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தை முழுமையாக சீரமைத்து லாபம் தரும் நோக்கில் மேம்படுத்த, 16.70 கோடி ரூபாய் வரை செலவாகும் என தனியார் நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.