Abortion Pill : கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த அனுமதி.. உச்சநீதிமன்றம் அதிரடி..!
கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த தடை வதித்தும் கட்டுப்பாடு விதித்தும் கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த கருக்கலைப்பு மாத்திரையான மைஃபெப்ரிஸ்டோனை தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த தடை வதித்தும் கட்டுப்பாடு விதித்தும் கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு:
முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இரண்டு பழமைவாத நீதிபதிகளும் பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவை ஒப்பு கொண்டனர். 10 மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் நிலைநாட்டப்பட்ட கருக்கலைப்பு உரிமை ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்காவில் கருக்கலைப்பு மேற்கொள்பவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மைஃபெப்ரிஸ்டோன் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தீர்ப்பின் மூலம் இந்த மாத்திரை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைஃபெப்ரிஸ்டோன் மாத்திரையை பயன்படுத்த தடை வதித்தும் கட்டுப்பாடு விதித்தும் கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு எதிராக அதிபர் பைடன் தலைமையிலான அரசாங்கம், உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தனர். முன்னதாக, டெக்சாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கருக்கலைப்பு எதிர்ப்பு குழு வழக்கு தொடர்ந்தது. அதன் விளைவாக, மாத்திரைக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டது.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி:
கருக்கலைப்பு மாத்திரைக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், மாத்திரையை பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகளில் 6 பேர் பழமைவாதிகள் என்பதால் கருக்கலைப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கப்படுமா என சந்தேகம் எழுந்தது.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நீதித்துறையும் மைஃபெப்ரிஸ்டோன் மாத்திரைகளை உற்பத்தி செய்து வரும் டான்கோ ஆய்வகமும் மேல்முறையீடு செய்தது. அதன் தொடர்ச்சியாக, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
"பெண்களின் உடல்நலம் மீதான அரசியல் தாக்குதல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்"
இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் பைடன், "கீழமை நீதிமன்றத் தீர்ப்புகள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் முடிவை குறைத்து மதிப்பிட்டிருக்கும். பெண்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும்.
உச்ச நீதிமன்றத்தின் தடையின் விளைவாக, நாங்கள் இந்தப் போராட்டத்தை நீதிமன்றத்தில் தொடரும்போது, மைஃபெப்ரிஸ்டோன் பயன்பாட்டிற்குக் கிடைக்கிறது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெண்களின் உடல்நலம் மீதான அரசியல் தாக்குதல்களுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன்" என்றார்.
கடந்த 2000ஆம் ஆண்டு, மைஃபெப்ரிஸ்டோன் மாத்திரையை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.