H1B Vs Doctors: H1B விசா கட்டண உயர்விலிருந்து டாக்டர்களுக்கு விலக்கு.? அமெரிக்க அரசு திட்டம்
அமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்படும் ஹெச்1பி விசா கட்டண உயர்விலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பணிபுரிவதற்கான ஹெச்1பி விசாவிற்கான கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தி சமீபத்தில் ட்ரம்ப் அறிவித்தால் பெரும் அதிர்ச்சி அலை எழுந்தது. குறிப்பாக இந்தியர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில், அந்த விசா கட்டண உயர்விலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஹெச்1பி விசா - அதிர்ச்சி அளித்த ட்ரம்ப்
அமெரிக்காவில் பணிபுரிய, வெளிநாட்டினருக்கு அந்நாடு ஹெச்1பி விசாவை வழங்கி வருகிறது. இந்த விசாவிற்கான கட்டணம் இந்திய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாயாக இருந்தது. இந்நிலையில், திடீரென அந்த கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி, 1 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாயாக கட்டணம் வசூலிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். மேலும், அந்த கட்டணத்தை ஹெச்1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கு, அவரை பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் அனைவரையும், அவர்களை பணியமர்த்திய நிறுவனங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கட்டண உயர்விற்கு அமெரிக்கா விளக்கம்
இந்த விசா கட்டண உயர்வு, அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் ஒரு நோக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என அமெரிக்க அரசு தெரிவித்தது. மேலும், ஏற்கனவே ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்றும், இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கமளித்தது.
இதனிடையே, அவர்களது இந்த அறிவிப்பு, ஹெச்1பி விசாவை அதிக அளவில் பெறும் இந்தியர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க பரிசீலனை
இப்படிப்பட்ட சூழலில், ஹெச்1பி விசா கட்டண உயர்வுக்கு அமெரிக்காவிலேயே பல்வேறு துறை நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் மருத்துவத்துறை கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் எனவும் கருத்துக்கள் எழுந்தன. அதிலும், கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ அமைப்புகள் தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, தற்போது ஹெச்1பி விசா கட்டண உயர்விலிருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்பட உள்ளதாகவும், அதில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவார்கள் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவத்துறை பாதிக்கும் என்ற கருத்துகள் எழுந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், மற்ற துறைகளுக்கு எந்த மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரியவில்லை.





















