Anti Caste Bill: சாதிக்கு எதிராக சாட்டையை சுழற்றிய கலிபோர்னியா.. ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க புதிய சட்ட மசோதா
சாதிய பாகுபாட்டுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் நோக்கிலும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவில் சாதிய ஒடுக்குமுறை:
இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் சாதிய வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. உடுத்தும் உணவு போல, இந்தியர்கள், எங்கு சென்றாலும் சாதிய மனநிலையை தூக்கி கொண்டு சென்றுவிடுகின்றனர். இதனால்தான், இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், சாதிய பாகுபாட்டுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் நோக்கிலும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாண சட்டப்பேரவையில் சாதிய பாகுபாடு எதிர்ப்பு மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதா சட்டமாவதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை. இதன் காரணமாக, ஆளுநர் கவின் நியூசோமின் கையொப்பத்தை பெறுவதற்காக மசோதா அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சாதிக்கு எதிராக சாட்டையை சுழற்றிய கலிபோர்னியா:
இது சட்டமாகும் பட்சத்தில், சாதிய பாகுபாட்டுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றும் முதல் மாகாணம் என்ற பெறுமையை கலிபோர்னியா பெறும். மாநில செனட் உறுப்பினர் ஆயிஷா வஹாப் என்பவரால் இந்த மசோதா முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு, நாடு முழுவதும் உள்ள சாதி சமத்துவ சிவில் உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
வட அமெரிக்க இந்துக்கள் கூட்டமைப்பு (CoHNA), கலிபோர்னியா வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் என, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாதியின் அடிப்படையில் பாதுபாடு காட்டக்கூடாது என கலிபோர்னியாவின் அன்ரூ சிவில் உரிமைகள் சட்டம், கல்வி மற்றும் வீட்டுவசதி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, கலிபோர்னிய சட்டமன்றத்தில் பல கட்ட நடவடிக்கைக்கு பிறகு, மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி என கட்சி கடந்து, இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனித உரிமை ஆர்வலரும் சமத்துவ ஆய்வகங்களின் நிர்வாக இயக்குனருமான தேன்மொழி சௌந்தரராஜன் கூறுகையில், "கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றனர். அப்படி இருந்தால்தான், வன்முறைத் சம்பவங்கள், பாகுபாடுகளில் இருந்து விடுதலை பெற முடியும். இப்போது, கலிபோர்னியா சட்டப்பேரவை எங்களை வெற்றிக்கு அருகில் கொண்டு வர தீர்மானமாக வாக்களித்துள்ளது.
மசோதாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல, ஆளுநர் நியூஸோம் அதற்கு கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதனால், நாட்டுக்கும் உலகுக்கும் கலிபோர்னியா வழிகாட்டியாக இருந்து, எங்கள் நிறுவனங்களில் பாகுபாடு இல்லாமல் இருப்பதை உறுதிசெய்து அனைவருக்கும் வாய்ப்பை உறுதிசெய்யும்" என்றார்.